ADDED : மார் 22, 2025 04:24 AM

மேலுார்: குறிச்சி பட்டியில் மதுரை வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதி ஆண்டு மாணவிகள் அபர்ணா, சிபியா, கோபிகா உள்ளிட்ட பத்து பேர் கிராம தங்கல் மற்றும் கிராமப்புற அனுபவ திட்டத்தின் கீழ் தங்கி பயிற்சி பெற்றனர்.
நேற்று நெல் நாற்றை பறித்து பாரம்பரிய முறையில் நடவும், பவர் டில்லர் இயந்திரத்தை இயக்குவது குறித்தும் பயிற்சி பெற்றனர்.
* டி.கல்லுப்பட்டி வட்டாரத்திலும் மாணவியர் பத்துபேர் வேளாண் பணிஅனுபவத் திட்டத்தில் 2 மாதம் தங்கியிருந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தினமும் ஒருகிராமத்தில் வேளாண் காடு வளர்ப்பு உட்பட பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்குகின்றனர்.
பி.சுப்புலாபுரத்தில் மாணவி கார்த்திகா விவசாய பெண்களிடம் பேசுகையில், ''இப்பகுதி மழை குறைவான பகுதி. இங்கு பருத்தி, சோளம் போன்றவையே முக்கிய சாகுபடி பயிர்களாக உள்ளன.
இங்கு வறட்சியை தாங்கி வளரும் பயிர்களை சாகுபடி செய்யலாம். மாற்றுப் பயிர்களாக தேக்கு, புளி, கொடிக்காய்ப்புளி போன்றவற்றை வளர்ப்பது மூலம் வருமானமும் பெறலாம். வேளாண் காடுகளையும் வளர்க்கலாம்'' என்றார். மகளிர் குழுவைச் சேர்ந்த தேவகி உட்பட பலர் ஏற்பாடுகளை செய்தனர்.