ADDED : ஏப் 08, 2025 04:40 AM

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி துவக்கப்பள்ளியில் ஈரத் தரை மற்றும் பாதுகாப்பற்ற சூழலில் படிப்பதால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
இங்குள்ள தாதம்பட்டி காலனி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 70 மாணவர்கள் படிக்கின்றனர். 22 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வகுப்பறை தரைத்தளத்தில் 'டைல்ஸ்' பதித்துள்ளனர். ஆனால் மேலே தண்ணீர் கசிகிறது.
இதன் அருகே 2008ல் கட்டிய வகுப்பறைகள் பராமரிப்பின்றி மழை நேரத்தில் உள்ளே நீர் ஒழுகுகிறது. இதனால் வகுப்பறை தளம் அதிக ஈரமாகிறது. இதில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். மேற்பூச்சுக்கள் பெயர்ந்துள்ளன.
பழுதடைந்த கட்டடம் இடிக்கப்பட்டு பகுதியில் 3 ஆண்டுகளுக்கு மேல் தடுப்புச்சுவர் கட்டப்படவில்லை. இதனால் கால்நடைகள் புதரில் இருந்து விஷஜந்துகள் பள்ளிக்குள் வருகின்றன. அதேபோல் இங்கிருந்த அங்கன்வாடி மையம் இடிக்கப்பட்டு கட்டப்படாமல் உள்ளது.
மாணவர்கள், ஆசிரியர்கள் பாதுகாப்பாற்ற சூழலில் உள்ளனர். ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

