/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அறுவடை நேரத்தில் நீரில்மூழ்கிய நெற்பயிர்கள்
/
அறுவடை நேரத்தில் நீரில்மூழ்கிய நெற்பயிர்கள்
ADDED : டிச 16, 2024 06:40 AM

மேலுார்: இ. மலம்பட்டியில் அறுவடை செய்ய வேண்டிய நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
இ. மலம்பட்டியில் நீர்வளத் துறைக்கு சொந்தமான சிறுவன கண்மாய் 250 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இக் கண்மாய்க்கு பெரியாறு பிரதான கால்வாயில் 8 வது கிளை கால்வாய், தன்னுாற்று, மேலப்பட்டி கண்மாய் உள்ளிட்ட மூன்று வழிகளில் வரும் தண்ணீர் நிரம்பி அதன் மூலம் 450 க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும்.
தற்போது கண்மாய் தண்ணீரை நம்பி 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ளனர். சில தினங்களாக பெய்த மழையால் கதிர் அறுவடை நேரத்தில் அனைத்து பயிர்களும் நீரில் மூழ்கின.
விவசாயி ஜெயராமன் கூறியதாவது: கூட்டுறவு சொசைட்டியில் கடன் வாங்கி ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் செலவு செய்தோம். இன்னும் பத்தே நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய நிலையில், நெற்பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டன. தண்ணீர் வெளியேறாததால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. நெற்பயிரை அறுவடை செய்ய முடியாததால் வங்கிக் கடன் செலுத்துவது கேள்விக்குறியாகி உள்ளது. வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து விவசாய கடன்களை தள்ளுபடி செய்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.