ADDED : அக் 23, 2025 04:18 AM

மேலுார்: கள்ளந்திரி - குறிச்சிப்பட்டி வரை 12 வது பெரியாறு பிரதான கால்வாய் வழியாக செல்லும் தண்ணீரில் 47வது மடை வழியாக அ.வல்லாளப்பட்டிக்கு தண்ணீர் செல்கிறது. கால்வாயில் இருந்து வயலுக்கு நேரடியாக செல்லும் தண்ணீர் அளவை நேற்று முன்தினம் இரவு நீர்வளத் துறை அதிகாரிகள் முன்னறிவிப்பின்றி அதிகரித்தனர்.
இதனால் இடையார் பகுதியில் சசிபெரிய கருப்பன், அழகம்மாள், சுந்தரமூர்த்தி உள்பட பலவிவசாயிகள் பயிரிட்டு இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. அப்பகுதி விவசாயி சசி பெரிய கருப்பன் கூறியதாவது : வயலை உழுது நெல் நாற்றுகள் நடவு செய்து 7 நாட்களில் ஏக்கருக்கு. ரூ. 16 ஆயிரம் செலவு செய்துள்ளோம். அதிகாரிகள் பாசன கால்வாயில் திடீரென அதிகளவு திறந்ததால் வயலுக்குள் புகுந்த தண்ணீரால் மண் அரிப்பு ஏற்பட்டு நெற்பயிர் பாதித்துள்ளது. நீர்வளத்துறையினர் நேரடி பாசனத்திற்கு செல்லும் தண்ணீர் அளவை குறைக்க வேண்டும். பாதிப்பு குறித்து ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.