ADDED : அக் 12, 2025 05:11 AM
மதுரை கூட்டுறவுத்துறை ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு வழங்கிய ரூ.300 கோடி இடைக்கால நிவாரண மானியம் போதாது என தமிழ்நாடு கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
மாநில பொதுச்செயலாளர் வெங்கடாசலபதி கூறியதாவது: கூட்டுறவுத்துறையின் கீழ் உள்ள 33ஆயிரம் ரேஷன் கடைகளுக்கான வாடகை, மின்கட்டணம், ஊழியர்கள் சம்பளம் போன்ற செலவினங்களுக்காக, கடைகளை நடத்தும் சங்கங்களுக்கு அரசு ஆண்டுதோறும் மானியம் வழங்குகிறது. 2022 முதல் 2025 வரையான ஆண்டுகளுக்கு தணிக்கை செய்து அரசு அறிக்கை அனுப்பவில்லை. முன் மானியம் என்ற பெயரில் மூன்றாண்டுகளுக்கு சேர்த்து ரூ.853 கோடி வழங்கியது. ஆனால் தணிக்கை செய்தால் ரூ.1400 கோடி வழங்க வேண்டியுள்ளது.
தற்போது அரசாணை 109ன் கீழ் 2025 - 26 க்கு முன் மானியமாக அரசு ரூ.300 கோடி வழங்கியுள்ளது. பணியாளர்களின் தீபாவளி போனஸ், பண்டிகை முன்பணம் பெற இத்தொகை உதவும் என்றாலும் முழுமையாக வரவு செலவு தணிக்கை செய்து மீத மானியம் ரூ.547 கோடியை அரசு வழங்க வேண்டும் என்றார்.