ADDED : ஏப் 24, 2025 05:55 AM
திருமங்கலம்: திருமங்கலம் பூ மார்க்கெட்டிற்கு திருமங்கலத்தை சுற்றுவட்டார கிராமங்களில் விளையும் அனைத்து வகை பூக்களும் கொண்டு வரப்படுகின்றன.
சிலநாட்களாக திருவிழாக்கள், முகூர்த்த நாட்கள் இல்லாததால் பூ மார்க்கெட் வரும் மல்லிகை, பிச்சி, ரோஜா பூக்களின் வரத்து அதிகமாக இருந்த போதிலும், போதிய விற்பனை இன்றி தேங்கி விடுகிறது.
இதனால் பூக்களை மிகவும் குறைந்த விலையில் சென்ட் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். அவர்கள் கொள்முதல் செய்தது போக மீதி பூக்கள் குப்பைக்கு செல்கின்றன. இதனால் பூ விவசாயிகள், வியாபாரிகள் நஷ்டத்திற்கு உள்ளாகின்றனர்.
திருமங்கலம் பூ மார்கெட் விமான நிலைய ரோட்டில் செயல்பட்டு வந்தது. இங்கு தற்போது ரயில்வே மேம்பால பணிகள் நடப்பதால், வியாபாரிகள் அமர்வதற்கு கூட இடம் இன்றி ரோட்டோரம் வைத்து வியாபாரம் செய்கின்றனர். தற்போது கடும் வெயில் அடிப்பதால் பூக்கள் வழக்கத்தை விட வேகமாக காய்ந்து, கருகி விடுகிறது. எனவே பூ மார்க்கெட்டுக்கு என தனிஇடம் ஒதுக்கித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.