/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எரியும் நகராட்சி குப்பை கிடங்கால் அவதி
/
எரியும் நகராட்சி குப்பை கிடங்கால் அவதி
ADDED : பிப் 07, 2024 07:16 AM

திருமங்கலம் : திருமங்கலம் நகராட்சிக்கு சொந்தமான பெரிய குப்பை கிடங்கு ராஜபாளையம் ரோட்டில் கரிசல்பட்டி அருகே உள்ளது. இங்கு இருந்த சுத்திகரிப்பு இயந்திரம் பழுதடைந்ததால் பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான டன் குப்பை குவித்து வைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் இவற்றை அகற்றுவதற்காக தனித் திட்டம் தீட்டப்பட்டது. இருந்தும் குப்பை குவியல் குறைந்தபாடில்லை.
நேற்று இந்தக் குப்பை கிடங்கில் சிலர் தீவைத்து விட்டனர். அந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றத்தோடு கூடிய புகைமூட்டம் பரவியது. வீடுகளில் இருந்த பொதுமக்கள் என்ன செய்வது எனத் தெரியாமல் வீட்டிலிருந்து வெளியே வந்து நின்றனர்.
திருமங்கலம் - ராஜபாளையம் நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் புகைமூட்டத்தால் ரோடு தெரியாமல் மாலை நேரத்திலேயே முகப்பு விளக்குகளை எரியவிட்டுச் சென்றன. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குப்பையில் பற்றிய தீயை அணைக்கவும், குப்பைக்கு தீ வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
அதேபோல் திருமங்கலம் - விருதுநகர் ரோடு ராஜபாளையம் ரோடு சந்திப்பில் தீயணைப்பு நிலையத்திற்கு எதிரே உள்ள சுத்திகரிப்பு மையத்திற்கு வெளியில் கொட்டப்பட்டுள்ள குப்பையிலும் அவ்வப்போது சிலர் தீ வைப்பதால் தீயணைப்பு வீரர்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

