
விழுப்புரம், : விழுப்புரத்தில் போலீஸ் ஏட்டு, வீட்டில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம், மாம்பழப்பட்டு சாலை, அசோக் நகரை சேர்ந்தவர் முருகன், 50; இவர், திருக்கோவிலுார் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். முருகனுக்கு, கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு, சாலை விபத்து ஏற்பட்டு தலையில் காயம் ஏற்பட்டது. இதற்காக தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக உடல்நிலை பாதிப்பால் பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.
இந்நிலையில், முருகன், நேற்று காலை 8:30 மணிக்கு வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த விழுப்புரம் மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏட்டு முருகனுக்கு, தலையில் ஏற்பட்ட காயம் சரியாகாத வேதனையில் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.