/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கழிவுநீர் கால்வாயான உபரி நீர் கால்வாய்
/
கழிவுநீர் கால்வாயான உபரி நீர் கால்வாய்
ADDED : பிப் 16, 2024 05:53 AM

கருப்பாயூரணி: வண்டியூர் கண்மாயின் உபரிநீர் செல்லும் கால்வாயில், குடியிருப்புகளின் கழிவுநீர் வெளியேறும் கால்வாயாக மாறிவருகிறது. அதை பராமரித்து ரோடு அமைக்க வேண்டும்.
வண்டியூர் கண்மாய் மூலம் பலநுாறு ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. இந்த விளை நிலங்களில் பல, தற்போது குடியிருப்பு பகுதிகளாக மாறிவிட்டன.
மழைக் காலத்தில் இக்கண்மாயில் தண்ணீர் நிரம்பிய பிறகு, உபரி நீர் வைகைக்கு செல்லும் வகையில் பொதுப்பணித்துறை கால்வாய் அமைந்துள்ளது. இதையொட்டி கோமதிபுரம் விரிவாக்கப் பகுதியான ஜூபிலி டவுன், ஆவின்நகர், சிவசக்திநகர் உட்பட பல குடியிருப்பு பகுதிகள் பெருகியுள்ளன. இக்கால்வாய் 4 மீட்டர் அகலம் கொண்டது.
இதில் கோமதிபுரம், மருதுபாண்டியர் நகர், ஆவின் நகர் உள்ளிட்ட பகுதி குடியிருப்புகளின் கழிவு நீர் வந்து சேர்கிறது. நீண்ட காலமாக துார் வாராததால் கால்வாயில் புதர் மண்டிக் கிடக்கிறது.
இதை தடுக்கும் விதமாக கால்வாயை துார் வாரி, இரு கரைகளையும் சீரமைத்து ரோடு அமைக்க வேண்டும் என இப்பகுதியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.