/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஐ.டி.ஐ., மாணவர் எரித்துக்கொலை சிறுவர்கள் மீது சந்தேகம்
/
ஐ.டி.ஐ., மாணவர் எரித்துக்கொலை சிறுவர்கள் மீது சந்தேகம்
ஐ.டி.ஐ., மாணவர் எரித்துக்கொலை சிறுவர்கள் மீது சந்தேகம்
ஐ.டி.ஐ., மாணவர் எரித்துக்கொலை சிறுவர்கள் மீது சந்தேகம்
ADDED : ஜூலை 16, 2025 01:08 AM
மதுரை : மதுரை மாவட்டம் ஒத்தக்கடை சுதந்திராநகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் பிரசன்னா 17. மதுரை புதுார் அரசு ஐ.டி.ஐ.,யில் படித்து வந்தார். நேற்றுமுன்தினம் மாலை சிலைமான் அருகே இளமனுார் கண்மாய்கரையில் பாதி எரிந்த நிலையில் இவரது உடல் கிடந்தது. அருகில்  ரத்தக்கறையுடன் கல் ஒன்று இருந்ததால் அடித்து கொலை செய்துவிட்டு எரித்திருக்கலாம் என்ற கோணத்தில் சிலைமான் போலீசார் விசாரணையை துவக்கினர்.
நேற்றுமுன்தினம் காலை வழக்கம் போல் ஐ.டி.ஐ.,க்கு சென்றவர், இளமனுாரில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது வயதைச் சேர்ந்த 4 பேருடன் கண்மாய் பகுதிக்கு வந்ததை அப்பகுதியினர் பார்த்துள்ளனர். அவர்கள் ஐ.டி.ஐ., மாணவர்களா என போலீசார் விசாரித்ததில் இல்லை என தெரியவந்தது. இதனால் சக்கிமங்கலம், இளமனுார் பகுதியைச் சேர்ந்த சிறுவர்களில் யாராவது பிரசன்னாவின் நண்பர்களாக உள்ளார்களா என விசாரணை நடக்கிறது. சந்கேத்தின்பேரில் சிலரிடம் விசாரணை நடக்கிறது. கொலையாளிகளை பிடித்தால் மட்டுமே கொலைக்கான காரணம் தெரியவரும்.
அடையாளம் கண்டது எப்படி
பிரசன்னா உடல் அருகே பாதி எரிந்த நிலையில் ஐ.டி.ஐ., சீருடை சட்டை இருந்தது. அதில் காலர் பகுதியில் டெய்லரின் கடை பெயர் இருந்தது. கருப்பாயூரணி, ஒத்தக்கடை பகுதியில் விசாரித்தபோது, அந்த கடை ஒத்தக்கடையில் இருப்பது தெரிந்தது. டெய்லரிடம் விசாரித்தபோது 4 மாணவர்கள் தன்னிடம் சீருடை தைத்ததாக தெரிவித்தார். அவர்களின் முகவரியை பெற்று போலீசார் விசாரித்ததில், பிரசன்னா தவிர மற்றவர்கள் வீட்டில் இருப்பது தெரிந்தது.
பிரசன்னாதான் இறந்திருக்க வேண்டும் என போலீசார் முடிவு செய்தனர். உடலின் விரல்கள், அருகில் கிடந்த செருப்பு ஆகியவற்றை வைத்து, கொலை செய்யப்பட்ட பிரசன்னாதான் என குடும்பத்தினர் உறுதி செய்தனர். கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர்.

