/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சி.எஸ்.ஐ.,யிடம் நிலம் திரும்பப்பெறும் உத்தரவு ரத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு தற்போதைய நிலை தொடர உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
/
சி.எஸ்.ஐ.,யிடம் நிலம் திரும்பப்பெறும் உத்தரவு ரத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு தற்போதைய நிலை தொடர உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
சி.எஸ்.ஐ.,யிடம் நிலம் திரும்பப்பெறும் உத்தரவு ரத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு தற்போதைய நிலை தொடர உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
சி.எஸ்.ஐ.,யிடம் நிலம் திரும்பப்பெறும் உத்தரவு ரத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு தற்போதைய நிலை தொடர உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
ADDED : ஆக 28, 2025 11:30 PM
மதுரை: நிபந்தனைகளை மீறியதாக மதுரையில் சி.எஸ்.ஐ., நிர்வாகத்திற்கு ஒப்படைவு நிலம் வழங்கியதை ரத்து செய்து திரும்பப்பெறும் தமிழக அரசின் உத்தரவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தனி நீதிபதி ரத்து செய்தார். அதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
அதை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, 'நிலத்திலுள்ள பள்ளி, குடியிருப்பு பிளாட்களை பொறுத்தவரை தற்போதைய நிலை தொடர வேண்டும். மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை சொத்துக்களை உரிமை மாற்றம் செய்யவோ அல்லது அடமானம் வைக்கவோ கூடாது,' என உத்தரவிட்டது.
மதுரை தல்லாகுளத்தில் 31.1 ஏக்கர் ஒப்படைவு நிலத்தை 'தி அமெரிக்கன் போர்டு ஆப் கமிஷனர் பார் பாரின் மிஷனரிக்கு (ஏ.பி.சி.எப்.எம்.,) பெண்கள் மற்றும் ஆதரவற்றோருக்கான இல்லம் அமைக்க நிபந்தனைகளுடன் வருவாய்த்துறை 1912 ல் வழங்கியது.
ஏ.பி.சி.எப்.எம்., 'சர்ச் ஆப் சவுத் இந்தியன் டிரஸ்ட் அசோசியேஷ'னுடன் (சி.எஸ்.ஐ.டி.ஏ.,) இணைக்கப்பட்டது. 'யுனைடெட் சர்ச் போர்டு பார் வேர்ல்ட் மிஷனரிஸ்' (யு.சி.பி.டபிள்யூ.எம்.,) 31.1 ஏக்கர் நிலத்தை சி.எஸ்.ஐ.டி.ஏ.,விற்கு மாற்றியது. அதில் சில சொத்துக்களை விற்க மதுரை- ராமநாதபுரம் திருமண்டல (சி.எஸ்.ஐ.,) நிர்வாகம் 2006 ல் தீர்மானித்தது.
2008 ல் ஐ.ஐ.எப்.எல்., பெசிலிட்டீஸ் சர்வீஸ் நிறுவனம் 6.74 ஏக்கர் நிலத்தை வாங்கியது. அந்நிறுவனம் ஷிரயன்ஸ் பவுண்டேஷனுடன் இணைந்து 2 அடுக்குமாடி குடியிருப்புகளை அரசின் அனுமதியுடன் அமைத்தது. அதில் 150க்கும் மேற்பட்டோர் வீடுகளை வாங்கி, வசிக்கின்றனர். பிளாட் உரிமையாளர்கள் கோல்டன் லோட்டஸ் உரிமையாளர்கள் நல குடியிருப்பு சங்கத்தை துவக்கினர்.
ஒப்படைவு நிபந்தனை மீறப்பட்டதாகவும், ஏ.பி.சி.எப்.எம்., வசம் நிலத்தை ஒப்படைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும் தேவசகாயம் என்பவர் தமிழக நில நிர்வாக கமிஷனரிடம் புகார் செய்தார். அரசு நிலத்தை விதிகளைமீறி மூன்றாம் தரப்பிற்கு சி.எஸ்.ஐ., நிர்வாகம் மாற்றியதாகவும், நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரியும் 2022 ல் உயர்நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். நில நிர்வாக கமிஷனர் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
விசாரணைக்கு பின் அவர் நில ஒப்படைவு உத்தரவை 2024 ல் ரத்து செய்தார். இதை எதிர்த்து ஐ.ஐ.எப்.எல்.,பெசிலிட்டீஸ் சர்வீஸ் நிறுவனம், ஷிரயன்ஸ் பவுண்டேஷன், சி.எஸ்.ஐ., மதுரை ராமநாதபுரம் திருமண்டலம் சார்பில் உயர்நீதிமன்றக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
தனி நீதிபதி பி.பி.பாலாஜி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்கள் நிவாரணம் பெற உரிமை உண்டு. 2018 ல் அரசின் மானியச் சட்டம் ரத்து செய்யப்பட்டதன் மூலம் 1912 ல் பிறப்பிக்கப்பட்ட நிலம் ஒப்படைவு நிபந்தனைகள் செல்லாததாகி விடுகிறது.
2018 க்கு முன்பு கூட, விதிமீறல்களுக்கு எதிராக ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. மாறாக பட்டா, 'லே அவுட்' (கட்டட திட்டம் ஒப்புதல்) வழங்குதல், வருவாய்த்துறை ஆவணங்களை மாற்றியமைத்து விட்டு, நிலம் ஒப்படைவை ரத்து செய்து மீண்டும் கையகப்படுத்த முயற்சிக்கப்படுகிறது. மனுக்கள் அனுமதிக்கப்படுகின்றன. நில நிர்வாக கமிஷனர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து நில நிர்வாக கமிஷனர் மேல்முறையீடு செய்தார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜரானார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: சம்பந்தப்பட்ட நிலத்திலுள்ள பள்ளி, குடியிருப்பு பிளாட்களை பொறுத்தவரை தற்போதைய நிலை தொடர வேண்டும்.
மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை சொத்துக்களை உரிமை மாற்றம் செய்யவோ அல்லது அடமானம் வைக்கவோ கூடாது.
காலியாக உள்ள இடத்தை பொறுத்தவரை அரசு கையகப்படுத்தி பொது நோக்கத்திற்கு பயன்படுத்தலாம். வணிக வளாகத்திலுள்ள கடைக்காரர்கள் வாடகை தொகையை செலுத்த தனி வங்கி கணக்கை கலெக்டர் துவக்க வேண்டும்.
தற்போதைய சந்தை மதிப்பிற்கேற்ப வாடகை தொகையை கலெக்டர் உயர்த்திக் கொள்ளலாம். சி.எஸ்.ஐ., மதுரை ராமநாதபுரம் திருமண்டல நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.