/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முதல்வர் ஸ்டாலினுக்கு 'எதிர்க்கட்சித் தலைவர்' பதவி பரிசு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை
/
முதல்வர் ஸ்டாலினுக்கு 'எதிர்க்கட்சித் தலைவர்' பதவி பரிசு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை
முதல்வர் ஸ்டாலினுக்கு 'எதிர்க்கட்சித் தலைவர்' பதவி பரிசு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை
முதல்வர் ஸ்டாலினுக்கு 'எதிர்க்கட்சித் தலைவர்' பதவி பரிசு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை
ADDED : நவ 10, 2024 04:57 AM
மதுரை : வரும் 2026ல் முதல்வர் ஸ்டாலினுக்கு 'எதிர்க்கட்சித் தலைவர்' பதவியைபரிசளிக்க தயாராக இருப்பதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் ஜெயராஜராஜேஸ்வரன் கூறினர்.
அவர்கள் கூறியதாவது:
2021ல் சட்டசபைத் தேர்தலின் போது புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் ஆகியும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊக்க ஊதிய உயர்வு, 24 மாத அகவிலைப்படி, ஈட்டிய விடுப்பை ஒப்படைக்கும் முறை ஆகியவற்றை முடக்கினர். கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை 25 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்தனர். பல துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாமல் இளைஞர்களின் அரசுப்பணி கனவை முடக்கினர். ஆட்சியில் வைத்து அழகு பார்த்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் உரிமைகளை பறித்தது தான் இவர்களின் மூன்றாண்டு கால சாதனையாக உள்ளது.
கடந்த 6 மாதத்திற்கு முன் முதல்வர் ஸ்டாலின் திருமண நிகழ்வொன்றில் தேர்தல் வாக்குறுதி அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார். அதைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது.
பள்ளிக் கல்வித்துறை ஆய்வு கூட்டத்தில் நிதிசாரா கோரிக்கைகளை மட்டுமே நிறைவேற்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகவும், புதிய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட நிதிசார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளதன் வாயிலாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு துரோகம் இழைத்துள்ளார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட சி.பி.எஸ்., சந்தா தொகை தமிழக அரசால் தவறுதலாக கையாளப்பட்டுள்ளது. இதனால் ஓய்வூதியப் பலன்கள் கிடைக்காமல் போக்குவரத்துத் துறை ஊழியர்களின் நிலைமை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் வரவுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் மட்டுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்துப் பேசுவார் எனில் 2026ல் அவருக்கு அதை பரிசளிக்க தயாராக இருக்கிறோம். இன்று (நவ.,10) கரூரில் நடைபெறும் மாநில செயற்குழுவில் தீவிர போராட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக விவாதிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.