/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தி.மு.க., எம்.எல்.ஏ., பிறந்தநாள்பேனரை அகற்றாதவர்கள் மீது வழக்கு உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
/
தி.மு.க., எம்.எல்.ஏ., பிறந்தநாள்பேனரை அகற்றாதவர்கள் மீது வழக்கு உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
தி.மு.க., எம்.எல்.ஏ., பிறந்தநாள்பேனரை அகற்றாதவர்கள் மீது வழக்கு உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
தி.மு.க., எம்.எல்.ஏ., பிறந்தநாள்பேனரை அகற்றாதவர்கள் மீது வழக்கு உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
ADDED : டிச 28, 2024 05:30 AM
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பு(அன்பழகன்) பிறந்தநாளையொட்டி அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றாதவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் எருமப்பட்டி ஓலைபாடி குருமூர்த்தி தாக்கல் செய்த பொதுநல மனு: கும்பகோணம் தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பு பிறந்தநாளை (டிச.,24) முன்னிட்டு ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களால் அரசின் அனுமதியின்றி கும்பகோணத்தில் சட்டவிரோதமாக பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், அலங்கார வளைவுகள், ரோடுகள், நடைபாதைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்பட்டன.
ஏற்கனவே ஒரு வழக்கில் தி.மு.க., தலைவர் தரப்பில், 'சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியின்றி எதிர்காலத்தில் பேனர்களை நிறுவமாட்டோம்,' என சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் தாக்கல் செய்யப்பட்டது. இதை பதிவு செய்த உயர்நீதிமன்றம்,'விதிமீறல் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் அல்லது அமைப்புகள் பொறுப்பேற்க வேண்டும். சம்பந்தப்பட்டோர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என உத்தரவிட்டது.
இதை அன்பு பின்பற்றவில்லை. அவருக்கு எதிராக தஞ்சாவூர் கலெக்டர், எஸ்.பி., கும்பகோணம் நகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்கவில்லை. எதிர்காலத்தில் இதுபோல் சட்டவிரோதமாக பேனர்கள் வைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் அமர்வு விசாரித்தது.
அரசு தரப்பு: பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. அனுமதியின்றி வைக்கப்பட்ட பல பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. அகற்றாதவர்கள் மீது 7 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை. இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: கலெக்டர், எஸ்.பி., நகராட்சி கமிஷனர் 2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.