/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'டீன் ஏஜ்' கர்ப்பம் : மதுரையில் அதிகரித்து வருகிறது: சவாலாக மாறும் குழந்தைப்பேறு
/
'டீன் ஏஜ்' கர்ப்பம் : மதுரையில் அதிகரித்து வருகிறது: சவாலாக மாறும் குழந்தைப்பேறு
'டீன் ஏஜ்' கர்ப்பம் : மதுரையில் அதிகரித்து வருகிறது: சவாலாக மாறும் குழந்தைப்பேறு
'டீன் ஏஜ்' கர்ப்பம் : மதுரையில் அதிகரித்து வருகிறது: சவாலாக மாறும் குழந்தைப்பேறு
ADDED : ஜூன் 04, 2025 01:29 AM

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டுக்கு வரும் கர்ப்பிணிகளில் 'டீன் ஏஜ்' பருவத்தினர் வருவது அதிகரித்துள்ளதால் குழந்தைப்பேறும் சவாலாக உள்ளது.
பெண்களின் திருமண வயது 18 ஆக இருந்தாலும் இன்னமும் கிராமப்புறங்களில் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்வது தொடர்கதையாக உள்ளது. இதை குழந்தை திருமணம் என்ற பெயரில் சமூகநலத்துறை மூலம் கண்காணிக்கப்பட்டு அத்திருமணங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன. ஆனாலும் மதுரை அரசு மருத்துவமனைக்கு வரும் இளம்வயது கர்ப்பிணிகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
இந்தாண்டு ஜனவரியில் 15 பேர், பிப்.,ல் 10, மார்ச்சில் 37, ஏப்ரலில் 25 பேர் என நான்கு மாதங்களில் 87 பெண்கள் 18 வயதுக்கு கீழ் கர்ப்பம் தரித்துள்ளனர். குழந்தை திருமணம் அல்லது திருமணமாகாமல் கருவுறுவது அல்லது பலாத்காரத்தின் மூலம் கர்ப்பமடைந்தால் 24 வார கருவாக இருக்கும் வரை அப்பெண்ணின் விருப்பத்தின் பேரில் கருக்கலைப்பு செய்வதற்கு அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் நான்கு மாதங்களில் 10 பேர் கருக்கலைப்பு செய்துள்ளனர். நான்கு மாதங்களில் 34 பேர் குழந்தை பெற்றுள்ளனர்.
டாக்டர்கள் கூறியதாவது: 18 வயதுக்கு கீழே குழந்தைப் பேறுக்கு தயாராகும் போது இடுப்பெலும்பு வளர்ச்சி முழுமையாக இருக்காது என்பதால் சுகப்பிரசவத்திற்கான வாய்ப்பு குறையும். சிலருக்கு திடீர் ரத்தஅழுத்தம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. ரத்தசோகை அதிகமாக இருக்கும் பெண்களுக்கு குறைப்பிரசவத்திற்கும் குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பதற்குமான வாய்ப்பு அதிகம். இது உடல்சார்ந்த பிரச்னைகள். அவர்களே மனதளவில் குழந்தையாக இருக்கும் நிலையில், சரியான எடையுடன் பிறந்த குழந்தைகளை கூட கையாள்வது குறித்த புரிதல் இருக்காது.
இந்நிலையில் எடை குறைந்தோ, குறைப்பிரசவத்தில் குழந்தை பிறந்தாலோ அவர்களால் முழுமையாக குழந்தை வளர்ப்பில் ஈடுபட முடியாது. பெண்ணின் திருமண வயது என அரசு நிர்ணயித்த வயதில் திருமணம் செய்து, அதன் பின் குழந்தை பெற்றால் இதுபோன்ற சிக்கல் வரும் வாய்ப்பு குறையும் என்றனர்.