கோயில்களில் இனி ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம்: பணியாளர்கள் கொதிப்பு
கோயில்களில் இனி ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம்: பணியாளர்கள் கொதிப்பு
UPDATED : அக் 12, 2026 05:41 PM
ADDED : அக் 12, 2026 05:36 PM
மதுரை: அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் கீழ்நிலை பணியிடங்களை இனி தினக்கூலி அல்லது தொகுப்பூதியம் அடிப்படையிலேயே நிரப்ப வேண்டும் என கோயில் இணை கமிஷனர்களுக்கு துறை கமிஷனர் வினய் உத்தரவிட்டார்.
இத்துறையின்கீழ் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. பணியாளர்கள் பற்றாக்குறை உள்ள நிலையில், புதிய நியமனம் செய்யப்படுவதில்லை. இதனால் ‘மாற்றுப்பணியாக’ பிற கோயில்களில் பலர் பணியாற்றுகின்றனர். புதிதாக பணிநியமனம் செய்யவும், வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இதுவரை அதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை.
நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில், ‘அறநிலையத்துறை வாரியம் உருவாக்கப்படும்’ என அறிவிக்கப்பட்டது. ‘வாரியம் அமைக்கும் வரை எந்த பணிநியமனமும் மேற்கொள்ள வேண்டாம். அதுவரை ஆள் பற்றாக்குறையை சமாளிக்க தினக்கூலி, தொகுப்பூதியம் அடிப்படையில் ஆட்களை நியமிக்கலாம். துாய்மைப்பணி, பராமரிப்பு போன்ற பணிகளை சுயஉதவிக்குழுக்கள் மூலம் மேற்கொள்ளலாம்’ என கோயில் இணை கமிஷனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கமிஷனர் வினய் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘கோயில்களில் தேவைப்படும் அத்யாவசிய பணியிடங்களை தற்காலிகமாக நிரப்பலாம். குறிப்பாக கீழ்நிலை பணியிடங்களான கிளார்க், டைப்ரைட்டர், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், துாய்மை பணியாளர், டிரைவர், செக்யூரிட்டி, மின் பணியாளர், பிளம்பர், விற்பனையாளர், அலுவலக உதவியாளர் பணியிடங்களை வெளிமுகமை, சுயஉதவிக் குழுக்கள் மூலம் நிரப்ப வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
இதற்கு கோயில் பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், ‘‘கோயில்களில் 40 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் எங்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டும் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இப்போது கோயில்களை தனியார் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லும் நோக்கில், ‘சி’, ‘டி’ பிரிவு பணியிடங்களுக்கு வெளி ஆட்களை நியமிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளடைவில் அறநிலையத்துறையே தனியார் மயமாக்கப்பட்டு, எல்லாமே வணிகமயமாக்கப்பட வாய்ப்புள்ளது. கோயில்களில் போதுமான வருவாய் உள்ள நிலையில், அந்தந்த கோயில் இணைகமிஷனர்கள் மூலம் தகுதி அடிப்படையில் நிரந்தர பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
