/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருப்பரங்குன்றம், சோலைமலை முருகன் கோயில்களில் தைப்பூசம்
/
திருப்பரங்குன்றம், சோலைமலை முருகன் கோயில்களில் தைப்பூசம்
திருப்பரங்குன்றம், சோலைமலை முருகன் கோயில்களில் தைப்பூசம்
திருப்பரங்குன்றம், சோலைமலை முருகன் கோயில்களில் தைப்பூசம்
ADDED : ஜன 26, 2024 05:42 AM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமி, தெய்வானை புறப்பாடாகினர்.
ராஜ அலங்காரம்
சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து காலையில் பூஜை முடிந்து சிவாச்சாரியார்கள் சொக்குசுப்பிரமணியம், ஸ்ரீகாந்த் ஆகியோர் பூஜை பொருட்களுடன் உப கோயிலான மலை அடிவாரத்திலுள்ள பழநி ஆண்டவர் கோயிலுக்கு சென்றனர். அங்கு யாக பூஜை முடிந்து மூலவர் பழநி ஆண்டவருக்கு 100 லிட்டர் பால், சந்தனம், தேன், இளநீர், விபூதி உள்பட பதினாறு வகை அபிஷேகங்கள் முடிந்து ராஜ அலங்காரமானது. தீபாராதனைக்கு பின்பு பிரசாதம் வழங்கப்பட்டது.
சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமி, தெய்வானை தனித்தனியாக ரத வீதிகளில் புறப்பாடாகினர். இரண்டு உற்ஸவர்கள் புறப்பாடாவது ஆண்டுக்கு ஒரு முறை தைப்பூசத் தன்று மட்டுமே.
பறவை காவடி
தைப்பூசத்தையொட்டி நேற்று மதுரை வட்டார பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். பால், பன்னீர், இளநீர் காவடி எடுத்தும், முகத்தில் அலகு குத்தியும், ஜெய்ஹிந்த் புரம் பக்தர்கள் 8 பேர் ஒரே பறவை காவடியில் வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கூட்டம் அதிகம் இருந்ததால் மதியம் 1:00 மணிக்கு பதிலாக 3:00 மணி வரை கோயில் நடை திறக்கப்பட்டு இருந்தது. மீண்டும் மாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் தனி சன்னதியில் வள்ளி, தேவசேனா சமேத கல்யாண முருகன் முன்பு யாகம் வளர்த்து பூஜை முடிந்து கோயிலுக்குள் சுவாமி புறப்பாடாகினர்.
அழகர்கோவில்
மதுரை அழகர்கோவில், சோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா ஜன.,16ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று யாகசாலை பூஜைகளும் மாலையில் பூதவாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடந்தது, தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடந்தது. ஜன., 23ல் குதிரை வாகனம், ஜன 24 தங்கத்தேரில் சுவாமி எழுந்தருளினார். மாலை வெள்ளி மயில் வாகனத்தில் சுப்ரமணிய சுவாமி எழுந்தருளி புறப்பாடு நடந்தது.
நேற்று (ஜன.25) தைப்பூசத்தையொட்டி காலை 10: 00 மணிக்கு சிம்மாசனத்தில் சுவாமி புறப்பாடும், 10:30 மணிக்கு அரோகரா கோஷத்துடன் தீர்த்தவாரி நிகழ்வும் நடந்தது. மாலையில் கொடி இறக்கம் நிகழ்ச்சியும், சுவாமி இருப்பிடம் சேரும் நிகழ்ச்சியுடன் தைப்பூச திருவிழா நிறைவுபெற்றது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி உட்பட பலர் செய்திருந்தனர்.
திருமங்கலம்
மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. சொக்கநாதர், மீனாட்சி, விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவதர் ஆகியோருக்கு பஞ்சமூர்த்திக சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. பூஜைகளை கோயில் அர்ச்சகர் சிவஸ்ரீ சங்கரநாராயண பட்டர் செய்தார். ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி அங்கயற்கண்ணி, தக்கார் சக்கரையம்மாள், விழா கட்டளையர்கள் ராஜேந்திரன்-வேதம் குடும்பத்தினர் செய்திருந்தனர்.
பாலமேடு
செம்பட்டி வரம் தரும் ஆதிஜோதி முருகர் கோயிலில் காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் விநாயகர் கோயிலில் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கணபதி ஹோமத்துடன் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தது. ராஜ அலங்காரத்தில் சுவாமி அருள் பாலித்தார். அலங்காநல்லுார் கொண்டையம்பட்டி வயித்து மலை அடிவாரத்தில் உள்ள சிவசுப்பிரமணியர் கோயிலுக்கு பக்தர்கள் அலகுகுத்தி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

