/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் ஆக.25ல் த.வெ.க., 2வது மாநில மாநாடு திராவிட கட்சிகளுக்கு போட்டியாக 506 ஏக்கரில் பிரமாண்டமாக நடக்கிறது
/
மதுரையில் ஆக.25ல் த.வெ.க., 2வது மாநில மாநாடு திராவிட கட்சிகளுக்கு போட்டியாக 506 ஏக்கரில் பிரமாண்டமாக நடக்கிறது
மதுரையில் ஆக.25ல் த.வெ.க., 2வது மாநில மாநாடு திராவிட கட்சிகளுக்கு போட்டியாக 506 ஏக்கரில் பிரமாண்டமாக நடக்கிறது
மதுரையில் ஆக.25ல் த.வெ.க., 2வது மாநில மாநாடு திராவிட கட்சிகளுக்கு போட்டியாக 506 ஏக்கரில் பிரமாண்டமாக நடக்கிறது
ADDED : ஜூலை 17, 2025 06:08 AM

மதுரை: தென்மாவட்டங்களில் முதன்முறையாக மதுரையில் ஆக.,25ம் தேதி த.வெ.க.,வின் 2வது மாநில மாநாடு 506 ஏக்கரில் பிரமாண்டமாக நடக்கிறது. இதற்கான பந்தல்கால் நடும் விழா நேற்று அதிகாலை நடந்தது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் கட்சி ஆரம்பித்ததும் கடந்தாண்டு அக்.,27ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் முதல் மாநாடு நடந்தது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் தென்மாவட்டங்களில் கவனம் செலுத்தும் வகையில் ஆக.,25ல் 2வது மாநில மாநாட்டை விஜய் நடத்துகிறார்.
இதற்கான பந்தல்கால் நடும் நிகழ்ச்சி யாகசாலை பூஜையுடன் நேற்று மதுரை - துாத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தி கிராமத்தையொட்டி உள்ள மாங்குளத்தில் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நடந்தது.
நேற்று அதிகாலை 5:25 மணி முதல் காலை 7:00 மணி வரை பூஜை நடந்தது. கும்பங்கள் பூஜைக்கு தயார் செய்யப்பட்டு மதுரை பாண்டி முனீஸ்வரர், மடப்புரம் காளி, சமயபுரம் மாரியம்மன், கள்ளழகர், திருப்பரங்குன்றம் முருகன் உள்ளிட்ட தெய்வங்களின் படங்கள் வைக்கப்பட்டிருந்தன.
நடுவில் விநாயகர் மற்றும் வேளாங்கண்ணி மாதா குழந்தையுடன் மெக்கா படமும் 'எம்மதமும் சம்மதம்' என்ற அடிப்படையில் வைக்கப்பட்டிருந்தது. மொத்தம் 506 ஏக்கரில் 'பார்க்கிங்' வசதியுடன் மாநாடு நடக்க உள்ளது.
திருமண நாள், பிறந்தநாள்
பந்தல்கால் நடும் நிகழ்ச்சியின்போது மாநாடு தேதி குறித்து நிருபர்கள் கேட்டதற்கு பொதுச்செயலாளர் ஆனந்த், 'விஜய் அறிவிப்பார்' என்றார். அடுத்த சில மணி நேரத்திலேயே தனது 26வது திருமண நாள் மற்றும் தே.மு.தி.க., நிறுவனர் விஜயகாந்தின் 73வது பிறந்தநாளான ஆக.,25ல்  மாநாடு நடக்க உள்ளதாக விஜய் அறிவித்தார். இதைதொடர்ந்து தயாராக வைத்திருந்த லெட்டர் பேடுடன் மதுரை எஸ்.பி., அரவிந்த்தை ஆனந்த் சந்தித்து, மாநாட்டிற்கு அனுமதியும், பாதுகாப்பும் கேட்டு மனு அளித்தார்.
1.5 லட்சம் பேர் வருகை
அதில், மாநாடு நடத்த 200 ஏக்கர் நிலப்பரப்பை வாடகைக்கு பெற்றுள்ளோம். மாநாட்டிற்கு 1.5 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வரும் வாகனங்களை முறையாக நிறுத்த ஏற்பாடு செய்ய உள்ளோம்.
தொண்டர்களும், மக்களும் மாநாட்டிற்கு எளிதாக வந்து செல்ல உள்ளே, வெளியே 3 வழிகள் அமைக்க உள்ளோம்.
மாநாட்டிற்கு வரும் அனைவருக்கும் உணவு, தண்ணீர், கழிப்பறை, மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்படும். தேவையான ஆம்புலன்ஸ்களும் நிறுத்தப்படுகின்றன. தீயணைப்புத் துறையின் அனுமதியும், பாதுகாப்பும் கேட்க உள்ளோம்.
போலீசார் அளிக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி மக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் மாநாட்டை நடத்த உள்ளோம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் நிருபர்களிடம் பேசிய ஆனந்த், ''இது வெற்றி மாநாடாக, தமிழகத்திற்கு சாதகமாக அமையும். போலீசார் விதிக்கும் கட்டுப்பாடுகளை பின்பற்றி நடத்துவோம். ஏற்கனவே விக்கிரவாண்டி முதல் மாநாட்டில் எங்களுக்கு அனுபவம் உண்டு. அந்த மாநாட்டை காட்டிலும் மதுரை மாநாட்டில் அதிகம் பேர் வருவார்கள்'' என்றார்.
'வாகை சூடும்; வரலாறு திரும்பட்டும்'
'தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான த.வெ.க.,வின் இரண்டாவது மாநில மாநாடு ஆக.,25ம் தேதி, மதுரையில் நடக்கவுள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன். வாகை சூடும்; வரலாறு திரும்பட்டும்; வெற்றி நிச்சயம்.
விஜய்த.வெ.க., தலைவர்

