/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தாங்காத பாரம் : இனியும் தாங்காது பாலம்
/
தாங்காத பாரம் : இனியும் தாங்காது பாலம்
ADDED : அக் 19, 2025 10:25 PM

மதுரை: மதுரை தெற்குவாசல் - வில்லாபுரம் பாலம் 1989ம் ஆண்டு 500 மீட்டர் நீளத்தில் ரூ.70 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டது.
விமான நிலையம், அருப்புக்கோட்டை, துாத்துக்குடி என முக்கிய பகுதிகளுக்கு செல்லும் பாதை என்பதால் அதிகளவில் வாகனங்கள் இப்பாலத்தில் செல்கின்றன. போதுமான பராமரிப்பு பணிகள் இல்லாததால் பாலம் பரிதாபமாக உள்ளது. 7.5 மீ அகலம் உள்ள பாலத்தில் தடுப்புச் சுவர் பழுதடைந்து இடிபாடுகள் கீழே உள்ள குடியிருப்பு பகுதிகளில் விழுகின்றன.
எப்போதும் இடியலாம் எச்.எம்.எஸ்.காலனி சத்யராஜ் கூறியதாவது: தெற்குவாசல் பாலத்தில் அலுவலக நேரமான காலை 7:00 முதல் 11:00 மணி வரை போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் திணறுகின்றன. பழுதடைந்த பாலம் எப்போது வேண்டுமானாலும் இடியும் நிலையில் உள்ளது. அன்றாடம் வேலைக்கு செல்வோர் முதல் பள்ளி மாணவர்கள் வரை வேறு வழியின்றி இப்பாலத்தை பயன்படுத்துகின்றனர்.
ரோட்டில் உள்ள குழிகளில் சிக்கி விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. பாலம் ஏறும் இடத்தில் உள்ள பேரிகார்டுகளில் விதியை மீறும் வாகனங்களால் அடிக்கடி விபத்தும் நடக்கின்றன. போக்குவரத்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
சமூகஆர்வலர் கண்ணன் கூறியதாவது: தெற்குவாசல் - வில்லாபுரம் பாலம் போக்குவரத்து நெரிசலான பாலம் மட்டுமல்ல விரிசல்கள் நிறைந்த பாலமும்கூட. இப்பாலத்தை அதிகளவில் கனரக வாகனங்களும் பயன்படுத்துகின்றன. அவை செல்கையில் பாலத்தில் அதிர்வை உணர முடிகிறது. கைப்பிடிச்சுவர்கள் கம்பிகளோடு விழும் நிலையில் உள்ளன. நாற்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த போக்குவரத்து நெரிசல் தற்போது பலமடங்கு அதிகரித்துள்ளது. பொதுமக்களின் உயிரோடு விளையாடாமல், தாமதமின்றி உடனே மாற்றுப் பாலம் கட்ட நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.