/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சந்தோஷத்தை தொலைத்த அவனியாபுரம் சந்தோஷம் நகர்
/
சந்தோஷத்தை தொலைத்த அவனியாபுரம் சந்தோஷம் நகர்
ADDED : டிச 18, 2024 06:42 AM

அவனியாபுரம் : மதுரை மாநகராட்சி 100வது வார்டு அவனியாபுரம் சந்தோஷம் நகரில் 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
அப்பகுதி மக்களின் தலையாயப் பிரச்னை மழை காலங்களில் வீடுகள், ரோடுகளில் மழை நீர் தேங்கி நிற்பது தான்.
அப்பகுதி ராஜா, அன்சாரி, சரவணன், கார்த்திகேயன் கூறியதாவது:
மழை பெய்து விட்டால் தண்ணீர் எங்கள் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து கொள்வதுடன், ரோட்டிலும் தேங்கி நின்றுவிடும். குறைந்தது 10 நாட்களாவது தண்ணீர் நிற்கும். தண்ணீர் வடிந்த பின்பு ரோடுகள் சேறும் சகதியுமாக மாறிவிடும்.
மழை நீரில் இருந்து வீடுகளுக்குள் விஷப்பூச்சிகள் வருகின்றன. குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டிய ரோடு முழுமையாக சீரமைக்கப்படாததால் குண்டும் குழியுமாக உள்ளது. வரி மட்டும் உயர்த்தப்பட்டு விட்டது. ஆனால் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மாநகராட்சிக்கு மனமில்லை. இதுகுறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் பலன் இல்லை. இப்பகுதியை மேயர், கமிஷனர் பார்வையிட்டு மழைநீர் தேங்காது, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.