ADDED : ஆக 09, 2025 04:04 AM
மதுரை: மதுரை கோச்சடை நடராஜ் நகர் விவேகானந்தா குறுக்குத் தெருவில் 9 நாட்களுக்கு முன் பாதாள சாக்கடை கால்வாய் உடைந்து கழிவுநீர் கசிந்தது.
தொடர்ந்து கழிவுநீர் வெளியேறி ரோட்டில் ஓடியது. வெளியேற முடியாமல் தேங்கியது. துர்நாற்றம் வீசி, பொதுமக்கள் நடமாட அவதிப்பட்டதும் மாநகராட்சியில் புகார் தெரிவித்தனர்.
வழக்கம்போல அலைபேசி செய்தியை பதிவு செய்ததாகக் கூறியதுடன், ஆட்கள் வருவார்கள் என்றனர். அதன்பின் எப்போது பேசினாலும் அவர் வருவார், இவர் வருவார் என அலைபேசி எண்களை மாற்றி மாற்றிக் கூறி மக்களை அலைக்கழிப்புக்கு ஆளாக்குகின்றனர்.
அப்பகுதியினர் கூறுகையில், ''கழிவுநீர் புகார் குறித்து 10 பேர் வரை மாற்றி மாற்றி பேசினர். ஆனால் கவுன்சிலர் உட்பட ஒருவர் கூட இடத்திற்கு வந்து பார்வையிடவோ, தீர்வு காணவோ முயற்சிக்கவில்லை. இறுதியாக கமிஷனர் இமெயிலில் தெரிவித்தும் நேற்று மாலை வரை பதில் இல்லை'' என்றனர்.
வருவாய் கிடைக்கும் பணிகளுக்கு உடனே வரும் ஊழியர்கள் எவரும் இதில் அக்கறை காட்டாதது துரதிர்ஷ்டமே.