/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தமிழகத்தில் குறைந்து வரும் பூநாரை பறவைகள்; சரணாலயம் அமைத்து அழிவிலிருந்து மீட்க வேண்டும்
/
தமிழகத்தில் குறைந்து வரும் பூநாரை பறவைகள்; சரணாலயம் அமைத்து அழிவிலிருந்து மீட்க வேண்டும்
தமிழகத்தில் குறைந்து வரும் பூநாரை பறவைகள்; சரணாலயம் அமைத்து அழிவிலிருந்து மீட்க வேண்டும்
தமிழகத்தில் குறைந்து வரும் பூநாரை பறவைகள்; சரணாலயம் அமைத்து அழிவிலிருந்து மீட்க வேண்டும்
ADDED : ஜூலை 24, 2025 06:17 AM

மதுரை : குஜராத் வழியாக இந்தியாவிற்கு வலசை வரும் அரிய வகை வெளிநாட்டு பறவையான பூநாரைகளின் (கிரேட்டர் பிளெமிங்கோ) எண்ணிக்கை தமிழகத்தில் குறைந்து கொண்டே வருகிறது.
வளர்ந்த பெரிய பூநாரைகள் 4 அடி உயரம் இருக்கும். உப்புத்தன்மை அதிகமுள்ள ஏரிகளில் வெப்பத்தை தாங்கி வாழும். இவை ஆப்பிரிக்காவில் இருந்தும், மத்திய தரைக்கடல் நாடுகளில் இருந்தும் குளிர்காலங்களில் இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளுக்கு வலசை வருகின்றன. சிறு நண்டு, கூன்இறால்கள், நுண்ணுயிர்கள், மெல்லுடலிகள், நீர்த்தாவரங்களின் விதைகள், பாசிகளை உணவாகக் கொள்கின்றன.
மன்னார் வளைகுடா பகுதியில் பூநாரைகள் எதிர் கொள்ளும் வாழ்விடச் சிக்கல்களையும், குறைந்து வரும் எண்ணிக்கை குறித்தும் ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளனர் இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளை நிறுவனர் ரவீந்திரன், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை ஆய்வாளர் பைஜூ.
பத்தாண்டுகளாக தமிழகத்தின் தென் மாவட்ட நீர்நிலைப் பகுதிகள், கிழக்கு கடற்கரை பகுதிகளில் வாழ்விடப் பறவைகளின் இனப்பெருக்கத்தையும், வலசை பறவைகளின் வருகையையும் ஆய்வு செய்கின்றனர்.
அவர்கள் கூறியதாவது:
இந்தியாவின் குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஒடிசா, ஆந்திரா, தமிழகத்தில் 20 ஆண்டு களுக்கு முன் அதிக எண்ணிக்கையில் வலசை வந்த இப்பறவைகள் தற்போது வெகுவாக குறைந்து விட்டது. இந்தியாவின் சதுப்பு நிலப் பகுதிகளும், கடலின் தாழ்வான உப்பங்கழிமுகப் பகுதிகள் வளம் இழந்து போனதே இதற்கு காரணம். காலநிலை மாற்றத்தால் கடல்நீரில் ஏற்படும் மாற்றங்களும் கடல்நீரின் வெப்பம் உயர்வதால் இப்பறவைகளின் உணவாதாரம் குறைந்து வருகிறது.
விவசாய நிலங்களில் இருந்து வடியும் நீரில் அமிலத்தன்மை அதிகரிப்பதாலும், தாழ்வான கடற்கரையோரங்கள் உப்பளங்களாக மாறி வருவதாலும் எண்ணிக்கை குறைந்துள்ளது.
ராமேஸ்வரம் கோதண்டராமர் கடற்காயல் பகுதியினை, பூநாரைகள் சரணாலயமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் பழவேற்காடு, கோடியக்கரை, வேதாரண்ய சதுப்பு நில பகுதிகள், ராமேஸ்வரம், வாலிநோக்கம் பகுதிகளில் அக்டோபர் முதல் மார்ச் வரை ஆயிரக்கணக்கில் கூடுவதை கண்டறிந்துள்ளோம்.
கோடியக்கரை பகுதிகளில் ஆண்டுக்கு 40ஆயிரம் பறவைகள் வந்து சென்ற நிலையில் தற்போது பாதியளவே வருகின்றன. வலசை செல்லும் காலங்களில் தமிழகத்தில் உணவிற்காக 22 நீர்நிலைகள் சார்ந்த பகுதிகளில் தங்கிச் செல்கின்றன.
மதுரையில் சாமநத்தம், அவனியாபுரம் கண்மாய்கள், விருதுநகரில் திருத்தங்கல், திருநெல்வேலியில் விஜய நாராயணன் ஏரி, துாத்துகுடியின் முயல்தீவு, கன்னியாகுமரி, மரக்காணம் உப்பங்கழிகள், மணக்குடி, முட்டுக்காடு பகுதிகளில் உணவுக்காக ஜனவரி முதல் பிப்ரவரி இறுதி வரை வருகின்றன.
இப்பகுதிகளை மனித ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு அவற்றின் இயற்கை சூழல் கெடாமல் சரணாலயங்களாக அறிவித்து வலசை பறவைகளின் உணவு, இனப்பெருக்க சூழலை அதிகரிக்க வேண்டும் என்றனர்.