/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான பணி நாட்டிற்கான சேவை தினமலர் லட்சிய ஆசிரியர் 2025 விருது வழங்கி மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன் பேச்சு
/
ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான பணி நாட்டிற்கான சேவை தினமலர் லட்சிய ஆசிரியர் 2025 விருது வழங்கி மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன் பேச்சு
ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான பணி நாட்டிற்கான சேவை தினமலர் லட்சிய ஆசிரியர் 2025 விருது வழங்கி மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன் பேச்சு
ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான பணி நாட்டிற்கான சேவை தினமலர் லட்சிய ஆசிரியர் 2025 விருது வழங்கி மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன் பேச்சு
ADDED : அக் 11, 2025 05:45 AM

மதுரை: ஒவ்வொரு ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு பணி என்பது நாட்டிற்கான சேவையாக கருதப்படும் என மதுரையில் நடந்த தினமலர் லட்சிய ஆசிரியர் 2025 விருது வழங்கும் விழாவில் மதுரை மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன் பேசினார்.
சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நல்லாசிரியர் விருதுகள் போல, அர்ப்பணிப்புடன் பணியாற்றும் பள்ளி ஆசிரியர்களை தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் தினமலர் நாளிதழ் சார்பில் லட்சிய ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது.
இந்தாண்டும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பித்தனர். அவர்களின் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த 30 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு மதுரை தினமலர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பொது மேலாளர் ஆர்.பாலமுருகன் முன்னிலையில் கமிஷனர் சித்ரா விஜயன் விருது, சான்றிதழ், பரிசு வழங்கினார். செய்தி ஆசிரியர் ஜி.வி.ரமேஷ்குமார் வரவேற்றார்.
அர்ப்பணிப்பே நாட்டிற்கான சேவை கமிஷனர் சித்ரா விஜயன் பேசியதாவது: குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் பணி மகத்தானது. அந்த வாய்ப்பை ஒவ்வொரு ஆசிரியரும் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ள வேண்டும். பருவ வயது குழந்தைகளுக்கு ஒழுக்க கல்வியை கற்றுத்தருவதுடன் அவர்களின் அறியாமையை போக்கும் சுடராக ஆசிரியர்கள் விளங்க வேண்டும்.
மாணவர்கள் காய்ச்சி பழுக்க வைத்த இரும்பை போன்றவர்கள். அவர்களை என்னவாக ஆக்க வேண்டும் என்பது ஆசிரியர்களின் கையில் தான் உள்ளது.
மாணவர்களை சமுதாயத்திற்கு பயன்படும் இளம் தலைமுறையாக ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஒவ்வொரு ஆசிரியர்களும் நாட்டிற்கு சேவை செய்பவர்களே. அந்த சேவையின் அடிப்படையில் தான் தினமலர் லட்சிய ஆசிரியர் விருதுக்கு நீங்கள் தேர்வாகியுள்ளீர்கள். ஒவ்வொரு ஆசிரியையும் மாணவர்களுக்கு தாய் போன்றவர். அவர்களை தங்கள் குழந்தைகள் போல் நினைத்து கற்பித்து, சமுதாயத்தில் வெற்றி பெற வைப்பது உங்கள் கடமை. இவ்வாறு பேசினார்.
ஆசிரியர் சமுதாயமும் தினமலர் நாளிதழும் தினமலர் லட்சிய ஆசிரியர் 2025 விருது பெற்றவர்கள் சார்பில், ஆசிரியர்கள் சுமதி, மரியசெல்வி, கிறிஸ்டியன் கீலர், தனலட்சுமி, ரவிக்குமார், விஜயா, மலைராஜ் ஆகியோர் பேசியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் மத்திய, மாநில நல்லாசிரியர் விருதுக்கு தயாராவது போல் இவ்விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போதும் தயாராவோம். ஆசிரியர் சமுதாயத்திற்கும் தினமலர் நாளிதழுக்கும் பின்னிப் பிணைந்த உறவு உள்ளது. பல செய்திகளை தினமலர் நாளிதழில் படித்து தெரிந்துகொள்வோம்.
ஆசிரியர்களின் பல்வேறு பிரச்னைகளை வெளிக்கொண்டுவந்து தீர்வு ஏற்படுத்தித் தருகிறது. பட்டம் நாளிதழை மாணவர்கள் கொண்டாடுகின்றனர். இன்னும் பல நுாறு ஆண்டுகள் தினமலர் இதுபோன்ற விருதுகளை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்றனர். இந்தாண்டு லட்சிய ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் 4 பேர் மாநில நல்லாசிரியர்களாகவும் தேர்வு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.