/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தங்கப்பல்லக்கில் பக்தர்கள் மனதில் தங்கவந்தார் கள்ளழகர் கோவிந்தா... கோவிந்தா... என பக்தர்கள் பேரானந்தம்
/
தங்கப்பல்லக்கில் பக்தர்கள் மனதில் தங்கவந்தார் கள்ளழகர் கோவிந்தா... கோவிந்தா... என பக்தர்கள் பேரானந்தம்
தங்கப்பல்லக்கில் பக்தர்கள் மனதில் தங்கவந்தார் கள்ளழகர் கோவிந்தா... கோவிந்தா... என பக்தர்கள் பேரானந்தம்
தங்கப்பல்லக்கில் பக்தர்கள் மனதில் தங்கவந்தார் கள்ளழகர் கோவிந்தா... கோவிந்தா... என பக்தர்கள் பேரானந்தம்
UPDATED : மே 11, 2025 06:35 AM
ADDED : மே 11, 2025 04:53 AM

அழகர்கோவில்: மதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காக நேற்று மாலை அழகர்கோவில் மலையிலிருந்து தங்கப்பல்லக்கில் கண்டாங்கி பட்டுடுத்தி, நேரிக்கம்புடன் 'கோவிந்தா... கோவிந்தா...' என்ற பக்தர்கள் முழக்கத்துடன் மதுரை நோக்கி புறப்பட்டார். நாளை அதிகாலை 5:45 மணி முதல் 6:05 மணிக்குள் வைகையில் எழுந்தருளுகிறார்.
இதை முன்னிட்டு நேற்று சுவாமிக்கு நுாபுர கங்கை தீர்த்தத்தில் அபிஷேகம், திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. கள்ளழகர் அலங்காரத்தில் சிறப்பு பூஜை செய்தனர். கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் 18ம் படி கருப்பணசுவாமியிடம் உத்தரவு பெற்று மேள தாளங்களுடன் கள்ளழகர் மதுரை புறப்பட்டார். இரவு பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி மண்டக படிகளில் எழுந்தருளினார்.
இன்று அதிகாலை 5:30 மணி முதல் மூன்று மாவடியில் எதிர்சேவை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் எழுந்தருளுவார். இன்று நள்ளிரவு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையுடன் ஆயிரம் பொன் சப்பரத்தில் தமுக்கம் கருப்பணசுவாமி கோயிலில் எழுந்தருளுகிறார். அங்கிருந்து அதிகாலை 3:00 மணிக்கு தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றுக்கு புறப்படுகிறார். அதிகாலை 5:45 மணி முதல் 6:05 மணிக்குள் வைகையில் எழுந்தருளுகிறார்.
மதியம் ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி உற்ஸவம் நடக்கிறது. இரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயில் செல்கிறார்.மே 13 சேஷ வாகனத்தில் தேனுார் மண்டபத்தில் எழுந்தருளி, மதியம் கருட வாகனத்தில் மண்டூக முனிவருக்கு மோட்சம் தருகிறார். இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்ச்சியை தொடர்ந்து, மே 14 அதிகாலை மோகினி அவதாரத்தில் எழுந்தருளி காட்சியளிப்பார். மே 15 சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி புறப்படுகிறார். மே 16 காலை இருப்பிடம் சேருகிறார். இந்தாண்டு கள்ளழகர் 494 மண்டக படிகளில் எழுந்தருளுகிறார்.