/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஐந்து ஆண்டுகளாக பொலிவிழக்கும் 'ஆசிரியர் இல்லம்'' முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தும் செயல்படவில்லை
/
ஐந்து ஆண்டுகளாக பொலிவிழக்கும் 'ஆசிரியர் இல்லம்'' முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தும் செயல்படவில்லை
ஐந்து ஆண்டுகளாக பொலிவிழக்கும் 'ஆசிரியர் இல்லம்'' முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தும் செயல்படவில்லை
ஐந்து ஆண்டுகளாக பொலிவிழக்கும் 'ஆசிரியர் இல்லம்'' முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தும் செயல்படவில்லை
UPDATED : ஆக 18, 2025 07:52 AM
ADDED : ஆக 18, 2025 03:08 AM

மதுரை: மதுரையில் ரூ.3 கோடியில் கட்டப்பட்டு, முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட ஆசிரியர் இல்லம் பயன்படுத்தாமலேயே பொலிவிழந்து வருகிறது. இல்லத்திற்கு தேவையான தளவாடப்பொருட்கள் வாங்க கல்வித்துறை அனுமதி கிடைக்காததால் புதிய கட்டடம் வீணடிக்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க., ஆட்சியின்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா சட்டசபையில் 110 விதியின்கீழ் மதுரை, கோவை, திருச்சிக்கு ஆசிரியர் இல்லங்கள் கட்டப்படும் என அறிவித்தார். அதற்கான நிதியும் அ.தி.மு.க., ஆட்சியிலேயே ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அது நடைமுறைக்கு வர தாமதம் ஆனது.
முதல்வர் திறந்த இல்லம் மதுரையில் அவனியாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இதற்கு இடம் ஒதுக்கி ரூ. 3 கோடியில் கட்டிய இல்லத்தை 2021ல் முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தரைத்தளம், இரண்டு மாடிகளுடன் உள்ள இந்த இல்லத்தில் வரவேற்பு அறை, 18 தங்கும் அறைகள், சமையலறை, கருத்தரங்கு அரங்கு உள்பட தேவையான வசதிகள் உள்ளன. தென் மாவட்டங்கள், சென்னையில் இருந்து அலுவல் ரீதியாக மதுரை வரும் ஆசிரியர்கள் இந்த இல்லத்தில் குறைந்த வாடகையில் தங்கலாம். ரூ.3 கோடியில் கட்டிய இல்லத்திற்கு தேவையான தளவாடச் சாமான்கள் வாங்குவதற்கு, இதுவரை கல்வித்துறையின் அனுமதி கிடைக்கவில்லையாம்.
அதற்கான 'விலை மதிப்பீடு' (கொட்டேஷன்) கல்வி இயக்குநருக்கு அனுப்பி வைத்தும் இதுவரை பதில் இல்லை. இதனால் 5 ஆண்டுகளாக பயன்படுத்தாமலே பாழடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
அங்குசம் இல்லாத அவலம் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: கோவை, திருச்சியில் இந்த இல்லங்கள் நன்கு செயல்படுகின்றன. மதுரையில் மட்டும் 'யானை வாங்கியாச்சு, அங்குசம் வாங்க காசில்லாத' கதையாக ரூ. பல கோடியை செலவிட்டும் புதிய கட்டடம் கண்முன்னே பாழடைந்து வருகிறது.
அரசு சார் நிறுவனங்களில் இல்லத்திற்கு தேவையான தளவாடச் சாமான்கள், பர்னிச்சர்களுக்கு 'கொட்டேஷன்' பெற்று இயக்குநருக்கு அனுப்பி பல மாதங்களாகின்றன. இன்னும் அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. கட்டடத்திற்கு ஒதுக்கிய நிதியில் ரூ.15 லட்சம் இருப்பு தொகையாக பொதுப்பணித்துறை வைத்திருந்தது. அதில் இருந்தாவது பொருட்களை வாங்கியிருக்கலாம். ஆனால் அத்தொகையும் கல்வித் துறையில் ஒப்படைக்கப்பட்டது. வெளியூரில் இருந்து வரும் ஆசிரியர்களுக்கு பயன் தரும் இந்த இல்லத்தை புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.