/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விரக்தியுடன் திரும்பிய குன்றத்து விவசாயிகள்
/
விரக்தியுடன் திரும்பிய குன்றத்து விவசாயிகள்
ADDED : டிச 13, 2024 04:37 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்காக நேற்று விவசாயிகள் சிவராமன், லட்சுமணன், அபேல்மூர்த்தி, செல்லபாண்டி, சின்னையா, ரமேஷ், மகாமுனி உள்பட 20க்கும் மேற்பட்டோர் காலை 10:45 மணிக்கு சென்றனர். வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர் காசிநாதனும், திருப்பரங்குன்றம் தோட்டக்கலை சுருளீஸ்வரனும் வந்தனர். தாலுகா அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது.
காலை 11:15 மணிக்கு மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வந்த துணை கலெக்டர் ராமகிருஷ்ணன் தாலுகா அலுவலகத்தை திறந்தார். அவரிடம், ''இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அலுவலகத்தில் யாரும் இல்லையே'' எனக்கேட்டனர். அதற்கு அவர், வருவாய்த்துறையினர் போராட்டத்தில் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து விவசாயிகள் கிளம்பினர்.
விவசாயிகள் கூறியதாவது: போராட்டத்தில் ஈடுபடுவதை நேற்றே தெரிவித்திருக்கலாம். ஒவ்வொரு மாதமும் 2 வது செவ்வாய்க்கிழமை கூட்டம் நடத்துவர். இம்மாதம் வியாக்கிழமை என தகவல் தெரிவிக்கப்பட்டது. இங்கு வந்து பார்த்தால் கதவு பூட்டிக்கிடக்கிறது.
கூட்டம் நடப்பதை தெரிவிக்கும் தாசில்தார், நடக்காது என்பதையும் அறிவித்திருக்க வேண்டும். அலுவலக கதவிலாவது எழுதி ஒட்டி இருக்கலாம். எந்த தகவலும் தராமல் அலைக்கழித்த தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்

