ADDED : ஆக 11, 2025 04:18 AM

சோழவந்தான்: சோழவந்தான் அருகே காடுபட்டி கிழக்கு ஊருணி பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கிறது.
காடுபட்டியில் இருந்து விக்கிரமங்கலம் செல்லும் ரோட்டருகே ஊருணி அமைந்துள்ளது. இப்பகுதியின் முக்கிய நீராதாரமாக, கோயில் விழா காலங்களில் புனித நீர் எடுத்துச் செல்லும் இடமாக உள்ளது. நாகமலையில் இருந்து காடுபட்டி ஊருக்குள் வரும் பாசன கால்வாய் ஊருணியின் நீராதாரமாக உள்ளது.
மழைக்காலங்களில் நாகமலையில் பெய்யும் மழைநீர் கால்வாய் வழியாக ஊருணியை சென்றடையும். தற்போது கால்வாயில் குப்பை கொட்டி, சாக்கடையாக மாறிவிட்டதால் கழிவுகள் தேங்கும் நிலை உள்ளது. துார்வாராமலும், சுத்தம் செய்யாமலும், கழிவுநீர் ஊருணியில் தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது. ஊருணி நிறைந்து வெளியே செல்லும் நீர் விவசாயத்திற்கு பயன்படுகிறது. கழிவு நீரால் விவசாயம் பாதிக்கும் நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் ஊருணியை சீரமைக்க வேண்டும்