/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை வைகையில் தங்கக்குதிரையில் துள்ளி இறங்கினார் அழகர் 'கோவிந்தா... கோவிந்தா...' என மகிழ்ந்தனர் பக்தர்கள்
/
மதுரை வைகையில் தங்கக்குதிரையில் துள்ளி இறங்கினார் அழகர் 'கோவிந்தா... கோவிந்தா...' என மகிழ்ந்தனர் பக்தர்கள்
மதுரை வைகையில் தங்கக்குதிரையில் துள்ளி இறங்கினார் அழகர் 'கோவிந்தா... கோவிந்தா...' என மகிழ்ந்தனர் பக்தர்கள்
மதுரை வைகையில் தங்கக்குதிரையில் துள்ளி இறங்கினார் அழகர் 'கோவிந்தா... கோவிந்தா...' என மகிழ்ந்தனர் பக்தர்கள்
ADDED : மே 13, 2025 12:53 AM

மதுரை: மதுரை சித்திரைத்திருவிழாவில் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியாக வைகையாற்றில் நேற்று அதிகாலை 5:55 மணிக்கு பக்தர்களின் 'கோவிந்தா... கோவிந்தா...' கோஷத்திற்கு இடையே பச்சை பட்டு உடுத்தி தங்கக்குதிரையில் இறங்கி அருள்பாலித்தார் அழகர்.
சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா மே 8 ல் தொடங்கியது. வைகையாற்றில் எழுந்தருளவும், மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் கொடுக்கவும் மே 10ம் தேதி மாலை தங்கப்பல்லக்கில் அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் அலங்காரத்தில் புறப்பட்டார். நேற்றுமுன்தினம் எதிர்சேவை நடந்தது.
தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோயிலில் சுவாமிக்கு நுாபுர கங்கை தீர்த்தத்தால் திருமஞ்சனம் நடந்தது. பின்னர் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்துக்கொண்டு நேற்று அதிகாலை ஆயிரம் பொன்சப்பரத்தில் எழுந்தருளினார்.
தங்கக்குதிரையில் அதிகாலை 5:50 மணிக்கு வந்த அழகரை, வெள்ளிக்குதிரையில் காத்திருந்த வீரராகவ பெருமாள் வரவேற்றார். பின்னர் அதிகாலை 5:55 மணிக்கு பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு இடையே வைகையில் அழகர் எழுந்தருளினார்.
தீர்த்தவாரியில் தள்ளுமுள்ளு
பின்னர் காலை 10:40 மணிக்கு அழகரை குளிர்விக்க மதிச்சியம் ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நடந்தது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக தண்ணீர் பீய்ச்சி அடித்தனர்.
இதில் சிலர் தடைசெய்யப்பட்ட விசை பம்புகளை பயன்படுத்தியதை போலீசார் பறிமுதல் செய்தனர். பக்தர்கள் ஆங்காங்கே தடுக்கப்பட்டதால் போலீசாருடன் வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. தடையை மீறி பக்தர்கள், சுவாமி அருகே சென்று தரிசித்தனர். பின்னர் அங்கபிரதட்சணம் செய்தனர்.
இதைதொடர்ந்து இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில் சுவாமி எழுந்தருளினார். இன்று(மே 13) காலை சேஷ வாகனத்தில் எழுந்தருளி, வைகையாறு தேனுார் மண்டபத்திற்கு செல்கிறார். அங்கு மதியம் கருடவாகனத்தில் எழுந்தருளி, மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் கொடுக்கிறார். இரவு 11:00 மணி முதல் ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதாரம் அலங்காரம் நடக்கின்றன.
நாளை காலை 6:00 மணிக்கு மோகினி அவதாரத்துடன் புறப்பட்டு மதியம் அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க அலங்காரத்தில் எழுந்தருளுகிறார். இரவு 11:00 மணிக்கு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனம் நடக்கிறது. பின்னர் பூப்பல்லக்கில் அழகர்கோவிலுக்கு புறப்படுகிறார்.
மே 15ல் செல்லும் வழியில் திருக்கண் மண்டபங்களில் எழுந்தருளி, மே 16 காலை 10:00 மணிக்கு மேல் 10:25 மணிக்குள் இருப்பிடம் செல்கிறார்.