/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்தில் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது
/
குன்றத்தில் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது
ADDED : நவ 03, 2024 04:25 AM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு நிகழ்ச்சியுடன் நேற்று துவங்கியது.
கோயிலில் காலை 8:30 மணிக்கு கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அனுக்கை விநாயகர் முன்பு யாக பூஜை நடந்தது. தொடர்ந்து மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக் கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாளுக்கு பூஜை முடிந்து விசாக கொறடு மண்டபத்தில் யாகசாலை பூஜை தொடங்கியது.
ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானை, பின்பு உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு காப்பு கட்டப்பட்டது. திருவிழா நம்பியார் சிவாச்சாரியாருக்கு காப்பு கட்டப்பட்ட பின், பக்தர்களுக்கு சிவாச்சாரியார்கள் காப்பு கட்டினர். பக்தர்கள் திருவிழா நடக்கும் 7 நாட்களிலும் கோயில் மண்டபங்களில் தங்கி விரதமிருப்பர்.
தினம் உச்சிகால பூஜை முடிந்த பின்பு விரதமிருக்கும் பக்தர்களுக்கு தேன், சர்க்கரை கலந்த தினை மாவு, மாலையில் சர்க்கரை, எலுமிச்சை ஜூஸ், இரவு பாலும் இலவசமாக வழங்கப்படும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நவ.6ல் வேல் வாங்குதல், 7ல் சூரசம்ஹார லீலை, நவ.8 காலை தேரோட்டம், மதியம் 3:00 மணிக்கு மூலவர் முன்பு தயிர் சாதம் படைக்கப்பட்டு பாவாடை நைவேதன தரிசனம் நடக்கும். காப்பு கட்டும் நிகழ்ச்சியில் அறங்காவலர் குழுத்தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் மணிசெல்வம், பொம்ம தேவன், சண்முகசுந்தரம், ராமையா, துணை கமிஷனர் சூரிய நாராயணன் கலந்து கொண்டனர். கலெக்டர் சங்கீதா சண்முகார்ச்சனையில் பங்கேற்றார்.
திருநகர்
சித்தி விநாயகர் கோயிலில் நேற்று மூலவர் முருகப்பெருமானுக்கு மஹா அபிஷேகம், உற்ஸவர் வள்ளி, தெய்வானை கல்யாண முருகப் பெருமானுக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, சத்ரு சம்ஹாரத்ரிசதி அர்ச்சனை நடந்தது. நவ.7ல் வேல் வாங்குதல், சூரசம்ஹாரம், நவ. 8ல் சீர்தட்டு அழைத்தல், திருக்கல்யாணம் நடக்கிறது.
கமிஷனர்கள் ஆய்வு
இதற்கிடையே மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் நேற்று கிரிவலம் பாதை, நகரின் முக்கிய வீதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
கூடுதலாக 2 நடமாடும் கழிப்பறை வாகனங்கள், சிறுநீர் கழிக்க 20 தற்காலிக கழிப்பறைகள், கிரிவலப் பாதையில் 200 மீட்டர் இடைவெளியில் குடிநீர் வசதி, கிரிவலப் பாதையை சீரமைத்தல், கோயில் கழிப்பறைகள், மாநகராட்சி கழிப்பறைகளை சுத்தம் செய்ய துாய்மை பணியாளர்கள் நியமனம், குப்பையை அகற்ற கூடுதல் வாகனங்களை இயக்க மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார்.
பாதுகாப்பு குறித்து போலீஸ் கமிஷனர் லோகநாதன் கோயிலுக்குள்ளும், ரத வீதிகளிலும் ஆய்வு செய்தார். கோயிலுக்குள் பக்தர்கள் சிரமமின்றி சென்று திரும்ப ஒரு வழிப்பாதை அமைக்கவும், சிறப்பு தரிசன டிக்கெட் கொடுக்கும் இடங்களில் பக்தர்களின் கூட்டத்தை முறைப்படுத்தவும், சூரசம்ஹார தினத்தன்று சன்னதி தெருவில் பொதுமக்கள் வசதிக்காகவும், சுவாமி புறப்பாட்டிற்கு இடையூறு இன்றி மூங்கில் தடுப்புகள் அமைக்கவும் உத்தரவிட்டார்.
போலீஸ் உதவி கமிஷனர் குருசாமி, இன்ஸ்பெக்டர் மதுரைவீரன், அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, துணை கமிஷனர் சூரியநாராயணன், கண்காணிப்பாளர் ரஞ்சனி, மாநகராட்சி மண்டல தலைவர் சுவிதா, செயற்பொறியாளர் பாக்கியலட்சுமி, உதவி கமிஷனர் ராதா உடன் சென்றனர்.