/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மலைமேல் கார்த்திகை மகா தீபம் ஜோதிமயமான திருப்பரங்குன்றம்
/
மலைமேல் கார்த்திகை மகா தீபம் ஜோதிமயமான திருப்பரங்குன்றம்
மலைமேல் கார்த்திகை மகா தீபம் ஜோதிமயமான திருப்பரங்குன்றம்
மலைமேல் கார்த்திகை மகா தீபம் ஜோதிமயமான திருப்பரங்குன்றம்
ADDED : டிச 14, 2024 05:20 AM

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் நேற்று மாலை மலைமேல் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் தீப தரிசனம் செய்தனர். இன்று (டிச.14) தீர்த்த உற்ஸவம் நடக்கிறது.
திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் தாமிர கொப்பரைக்கு நேற்று காலை பூஜை முடிந்து மலைமேல் கொண்டு செல்லப்பட்டது. கோயிலுக்குள் அனுக்கை விநாயகர் முன்பு மாலை 5:00 மணிக்கு யாகம் வளர்க்கப்பட்டு பூஜை, தீபாராதனைகள் நடந்தது.
அதே நேரத்தில் மலை மேல் உள்ள தீப மண்டபம் அருகே உச்சிப்பிள்ளையார் மண்டபம் முன்பு வெள்ளிக் குடத்தில் புனித நீர் நிரப்பி விநாயகர் பூஜை, அக்னிலிங்க பூஜை, வர்ண பூஜை, தீபாராதனை முடிந்து தீப கொப்பரையில் புனித நீர் தெளிக்கப்பட்டது. கோயிலுக்குள் மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக் கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாள் சன்னதிகளில் பால தீபம் ஏற்றப்பட்டது.
கோயில் மணி அடிக்கப்பட்டதும் மலை மேல் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. அதைதொடர்ந்து அப்பகுதி வீடுகளில் மக்கள் தீபம் ஏற்றினர். இதனால் திருப்பரங்குன்றம் நகர்முழுவதும் ஜோதி வடிவாக காட்சியளித்தது. கோயிலில் மூலவர் முன்பு மூன்று முறை பாலதீப ஆரத்தி நடந்தது. இரவு தங்கமயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி 16 கால் மண்டபம் முன்பு எழுந்தருளினார். அங்கு சொக்கப்பனை தீபக் காட்சி முடிந்து சுவாமி ரத வீதிகளில் உலா நிகழ்ச்சியில் அருள் பாலித்தார்.
நேற்று கார்த்திகையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல ஆயிரம் பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் திரண்டனர். மழை பெய்த போதிலும் நனைந்தபடியே கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.