/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பரவையில் போராடிய மக்களை சந்தித்த அமைச்சர்
/
பரவையில் போராடிய மக்களை சந்தித்த அமைச்சர்
ADDED : நவ 21, 2024 04:44 AM
வாடிப்பட்டி: பரவை சத்தியமூர்த்தி நகரில் காட்டு நாயக்கன் ஜாதிச் சான்று கேட்டு பள்ளி மாணவர்கள் பெற்றோர்களுடன் 13 நாட்களாக பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் சங்கீதாவை போராட்ட குழுவினர் சந்தித்தனர். பேச்சு வார்த்தையை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பின்னர் மாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர், மாணவர்களை அமைச்சர் மூர்த்தி சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், ''ஐவர் குழு ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கை தலைமை செயலகத்திற்கு அனுப்பப்படும். அதனடிப்படையில் அரசு உத்தரவுப்படி ஜாதிச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
போராட்டக் குழுவினர் கூறுகையில், 'அமைச்சரே நேரடியாக எங்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். ஐவர் குழு விசாரணை தேவையில்லை. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு 2023ல் வெளியிட்ட அரசாணையில் பெற்றோருக்கு சான்று இருந்தால் குழந்தைகளுக்கு வழங்கலாம் என உள்ளது என்றனர். அதற்கான அரசாணை நகலை அமைச்சரிடம் வழங்கினர்.
சமுதாயத் தலைவர் வீராங்கன், பொருளாளர் கண்ணன் கூறுகையில், ''இன்று முதல் (நவ.21) மாணவர்களை பள்ளிக்கு அனுப்புகிறோம். ஒரு மாதத்திற்குள் ஜாதிச் சான்று கிடைக்கவில்லை என்றால் போராட்டத்தை தொடர்வது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம்'' என்றனர்.