/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இந்திய இளைஞர்களை வைத்து கம்போடியாவில் இருந்து ஆன்லைன் மோசடி தப்பி வந்த மதுரை நபரால் வெளிச்சத்திற்கு வந்த மர்மம் சிறப்பு பாஸ்போர்ட் மூலம் அனுப்பி வைத்த துாதரக அதிகாரிகள்
/
இந்திய இளைஞர்களை வைத்து கம்போடியாவில் இருந்து ஆன்லைன் மோசடி தப்பி வந்த மதுரை நபரால் வெளிச்சத்திற்கு வந்த மர்மம் சிறப்பு பாஸ்போர்ட் மூலம் அனுப்பி வைத்த துாதரக அதிகாரிகள்
இந்திய இளைஞர்களை வைத்து கம்போடியாவில் இருந்து ஆன்லைன் மோசடி தப்பி வந்த மதுரை நபரால் வெளிச்சத்திற்கு வந்த மர்மம் சிறப்பு பாஸ்போர்ட் மூலம் அனுப்பி வைத்த துாதரக அதிகாரிகள்
இந்திய இளைஞர்களை வைத்து கம்போடியாவில் இருந்து ஆன்லைன் மோசடி தப்பி வந்த மதுரை நபரால் வெளிச்சத்திற்கு வந்த மர்மம் சிறப்பு பாஸ்போர்ட் மூலம் அனுப்பி வைத்த துாதரக அதிகாரிகள்
ADDED : அக் 17, 2025 12:00 AM
மதுரை: 'டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்' பணி எனக்கருதி கம்போடியா நாட்டிற்கு சென்ற நபர், ஆன்லைன் மோசடியில் ஈடுபடும் கும்பலிடம் சிக்கி, இந்திய துாதரகம் மூலம் மதுரை திரும்பினார். இதன்மூலம் இந்தியாவில் நடக்கும் ஆன்லைன் மோசடி கம்போடியாவில் இருந்தும் நடத்தப்படுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சமீபகாலமாக சமூகவலைத்தளங்களில் வங்கி அனுப்புவது போல் 'லிங்' அனுப்பியும், நண்பர் போல் பழகியும் தனி நபர் வங்கி கணக்கில் இருந்து பணத்தை 'கொள்ளை' அடிப்பது அதிகரித்துள்ளது. இந்த மோசடியின் ஆரம்ப புள்ளி எங்கிருக்கிறது என கண்டறிவது போலீசாருக்கு சவாலாக இருந்தது. இந்நிலையில் மதுரை நபர் மூலம் இந்த மோசடி கம்போடியா நாட்டில் இருந்தும் நடத்தப்படுகிறது என தெரியவந்துள்ளது.
மதுரை பொன்மேனியைச் சேர்ந்தவர் மனோஜ் 31. பி.டெக்., ஐ.டி., முடித்தவர். இவரது சகோதரர் பிரதீப்பிற்கு கூடல்நகர் ராஜசேகர் என்பவர் அறிமுகமானார். தான் தாய்லாந்து நாட்டில் வேலை செய்வதாகவும், தனது கம்பெனிக்கு 'டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்' பணிக்கு ஆள் தேவை என்றும் கூறினார். மாதம் 1200 டாலர் சம்பளம் கிடைக்கும் என ராஜசேகர் கூறியதை நம்பி மனோஜை சேர்க்க பிரதீப் விரும்பினார். தாய்லாந்தில் இருந்து வாட்ஸ் ஆப் காலில் ராஜசேகர் நேர்முகத்தேர்வு நடத்தினார். இதில் மனோஜ் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும், தாய்லாந்துக்கு செல்ல விமான டிக்கெட், விசா செலவுகளை நிறுவனமே ஏற்றுக்கொள்ளும். பணியில் சேர்ந்த பிறகு தனக்கு ரூ.50 ஆயிரமும், வேலையை உறுதிசெய்ய ரூ.30 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.
புனைப்பெயர்களில் மோசடி இதற்கு சம்மதித்த மனோஜ், தாய்லாந்து தலைநகர் பாங்காங் சென்றார். அங்கு காத்திருந்த ராஜசேகரின் கூட்டாளி, அவரை காரில் கம்போடியா நாட்டின் எல்லையில் ஒரு நிறுவனத்திற்கு அழைத்துச்சென்றார். அங்கு ராஜசேகரை மனோஜ் சந்தித்தார். தனது பாஸ்போர்ட்டை பெற்றுக்கொண்ட ராஜசேகரிடம், 'தாய்லாந்தில் வேலை என்றுக்கூறி கம்போடியாவிற்கு அழைத்து வந்துள்ளீர்களே' என மனோஜ் கேட்டதற்கு, 'ஒழுங்கா நாங்க சொல்லும் 'டேட்டா என்ட்ரி' வேலையை மட்டும் பாரு' என மிரட்டினார்.
அங்கு நேபாளம், பாகிஸ்தான், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் புனைப்பெயரில் பணியாற்றி வருவதை கண்டு மனோஜ் அதிர்ச்சி அடைந்தார். இவருக்கு 'ஷாங்கோ' என புனைப்பெயரை சூட்டினர்.
வெள்ளை பாஸ்போர்ட் பின்னர் அவரை 'பிரியங்கா சர்மா' என்ற பெயரில் சமூகவலைத்தளங்களில் மெசெஞ்சர் மூலம் பலரை தொடர்பு கொண்டு, அவர்களது விபரங்களை பெற்று வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க வேண்டும் என்றனர். உயிருக்கு பயந்து மனோஜ் சிலரிடம் சமூகவலைத்தளங்களில் தொடர்பு கொண்டார்.
அங்கிருந்து தப்பிக்க முடிவு செய்து, சில நாட்கள் கழித்து தனக்கு உடல்நிலை சரியில்லை என ராஜசேகரிடம் கூற, '2000 டாலர் கொடுத்து உனது பாஸ்போர்ட்டை பெற்றுக்கொள்' என்றார்.
இதனால் ஒருமாதம் தொடர்ந்து வேலை செய்தார். இதற்காக அவருக்கு 600 டாலர் சம்பளம் தரப்பட்டது.
உடனடியாக கம்போடியாவில் உள்ள இந்திய துாதகரத்தை தொடர்பு கொண்டு தனது நிலையை மனோஜ் தெரிவிக்க, அவர்கள் முயற்சியால் 'வெள்ளை பாஸ்போர்ட்' (இந்திய அதிகாரிகள் அரசு பயணமாக செல்லும்போது பயன்படுத்துவது) எடுத்து தரப்பட்டு, அதன்மூலம் நாடு திரும்பினார்.
மோசடிகள் குறித்து மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், தன்னை போல் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரவீன், சாமுவேல் ஜெயராஜ், ஜோஸ்வா, மற்றும் பல மாநில இளைஞர்கள் சிக்கியுள்ளனர். ராஜசேகர், கம்போடியா நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தனது பாஸ்போர்ட்டை பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்தார்.
மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.