ADDED : நவ 13, 2024 04:31 AM

மதுரை : மதுரை பழங்காநத்தத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும்.
63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.காலை சிற்றுண்டி திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும், சத்துணவு ஊழியர்களைக் கொண்டு நடத்த வேண்டும் உட்பட 14 அம்சங்களை வலியுறுத்தினர்.
மாவட்ட தலைவர் விசாலாட்சி பேசுகையில், ''எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கடந்த ஜூனில் அமைச்சர் கீதா ஜீவன் உறுதியளித்தார். அதனால் போராட்டம் கைவிடப்பட்டது. தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை. இதனை அவரது கவனத்திற்கு கொண்டு செல்லவே போரட்டம் நடக்கிறது'' என்றார்.
போராட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் செல்வம், மாவட்ட தலைவர் நீதிராஜா, சத்துணவு ஊழியர் சங்க செயலாளர் சந்திரபாண்டி, பொருளாளர் இந்திராணி, அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.