/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சகிக்காத சக்கிமங்கலம் பிரச்னை என்றுதான் தீரும்
/
சகிக்காத சக்கிமங்கலம் பிரச்னை என்றுதான் தீரும்
ADDED : ஏப் 23, 2025 04:25 AM

சக்கிமங்கலம் மதுரை சக்கிமங்கலம் பகுதியில் ஆழ்குழாய் குடிநீரால் பலரும் நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
சக்கிமங்கலம் எல்.கே.பி., நகர், இந்திரா நகர், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சில ஆண்டுகளாகவே ஆழ்குழாய் குடிநீரால் மக்கள் பல்வேறு நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தபோது நீர் குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை எனத்தெரிந்தது. ஆனால் அதற்கு மாற்று ஏற்பாடு அதிகாரிகள் செய்யாததால் இதுவரை குடிநீரை விலைக்கு வாங்கி வருகின்றனர்.
அப்பகுதி மக்கள் கூறியதாவது: கழிவுநீர் கால்வாய் அமைக்காததால் தெருக்களில் ஓடுகிறது. மாதம் ஒரு முறை சில தெருக்களில் துார்வாரி செல்கின்றனர். ஆனாலும் கழிவுகளை ஆங்காங்கே வைத்துவிடுகின்றனர். முறையாக அப்புறப்படுத்தாததால் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. இரவில் கொசுத்தொல்லை தாங்கமுடியவில்லை. தெருநாய்கள், மாடுகள் அச்சுறுத்தல் அதிகளவில் இருக்கிறது.
குப்பை ஆங்காங்கே கொட்டுகின்றனர். சிலர் மொத்தமாக மெயின்ரோட்டின் அருகே குப்பையை எரித்துவிடுகின்றனர். மின் இணைப்புகள் கை எட்டும் துாரத்தில் தொங்குகின்றன. சில தெருக்களில் தெரு விளக்கும் இல்லை. அதிகாரிகளிடமும், ஊராட்சி உறுப்பினர்களிடமும் பல முறை கூறி சோர்ந்து விட்டோம். இவ்வாறு கூறினர்.

