/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இந்திய விண்வெளித்துறையின் அசுர வளர்ச்சி
/
இந்திய விண்வெளித்துறையின் அசுர வளர்ச்சி
ADDED : டிச 12, 2025 07:25 AM
மதுரை: ''இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தை ஒப்பிடும் போது விண்வெளி ஆராய்ச்சியில் 50 ஆண்டுகள் பின்தங்கிய நிலையில் இருந்தோம். சிக்கலான சாதனை படைத்த நாடுகளில் நான்காம் இடத்தில் தற்போது உள்ளோம்'' என தமிழ்நாடு வேளாண் பல்கலை முன்னாள் மாணவர்கள் சங்க மதுரை கிளை சார்பில் மதுரை வேளாண் கல்லுாரியில் நடந்த விழாவில் இஸ்ரோ தலைவர் நாராயணன் பேசினார்.
அவர் பேசியதாவது:
வல்லரசு நாடுகளை விட 50 ஆண்டுகள் கழித்து விண்வெளி ஆராய்ச்சியை துவக்கினோம். பல வல்லரசு நாடுகளுடன் போட்டியிடும் நிலைக்கு முன்னேறியுள்ளோம். அமெரிக்காவில் செயற்கைக்கோள் தயாரிக்க ஆகும் செலவில் பத்தில் ஒரு மடங்கை மட்டுமே செலவிட்டு, செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவி வருகிறோம். அதாவது ஆட்டோவில் ஒரு கிலோமீட்டர் துாரம் பயணிப்பதற்கு ஆகும் செலவை விட குறைந்தளவே செலவு செய்துள்ளோம்.
மூன்றாவது ஏவுதளம் எல்.எம்.வி., 3 ராக்கெட் திட்டம் வெற்றி அடைந்துள்ளது. இந்த ராக்கெட் மூலம் 'ககன்யான் 3' ஐ செலுத்த திட்டமிட்டுள்ளோம். அதிக ராக்கெட்டுகள் ஏவுவதற்கு அதிக ஏவுதளங்கள் தேவை. இஸ்ரோவின் இரண்டாவது ஏவுதள மையம் குலசேகரபட்டினத்தில் அமைக்கும் பணி நடக்கிறது. 2026 டிசம்பருக்குள் அங்கிருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படும். ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம் அமைப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளன.
2019ல் ஏவப்பட்ட சந்திரயான் 2 ஆர்பிட்டரானது, உலகிலேயே மிகச்சிறந்த கேமராவை சந்திரனின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தி மிகத்துல்லியமான படங்களை பெற்றுள்ளோம். 'ஸ்பாடெக்ஸ் மிஷன்' (விண்வெளி டாக்கிங்) போன்ற சிக்கலான சாதனைகளை படைத்த 4வது நாடு இந்தியா. சூரிய ஆய்வு (ஆதித்யா எல்1), மென்மையாக தரையிறங்கும் (சந்திரயான்) தொழில்நுட்பம் கொண்ட சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா அனைத்து துறைகளிலும் அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. மூன்றாண்டுகளில் அதிக எண்ணிக்கையில் ராக்கெட்கள் ஏவப்படும். இந்திய விண்வெளி நிலையம் 2035க்குள் அமைக்கப்படும். நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் 2040ல் நிறைவேறும்.
அதில் 40 மாடி உயர அளவுள்ள ராக்கெட்டில் 80ஆயிரம் கிலோ எடையுள்ள செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படும். இந்தியா சுதந்திரம் அடைந்தபின் உருவாக்கப்பட்ட முதல் செயற்கைக்கோளின் எடை 35 கிலோ தான். இப்போதுள்ள வளர்ச்சியை இதன் மூலம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். அமெரிக்காவுக்கான வணிகப்பயன்பாட்டு செயற்கைக்கோள் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்றார்.

