ADDED : நவ 02, 2025 03:46 AM

சோழவந்தான் நவ.2 -: சோழவந்தான் அருகே இரும்பாடி மந்தைக்குளம் தொடர்மழை பெய்த போதும் பராமரிப்பின்றி வறண்டுள்ளது.
அப்பகுதி விவசாயி பிச்சை: 135 ஏக்கர் பரப்பளவு, 3 மடைகள் கொண்ட இக்குளத்தால் நுாற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
வைகைப் பெரியாறு பிரதான கால்வாயில் இருந்து பிரியும் வடகரை கால்வாயில் 18வது மடையில் இருந்து வெளியேறும் கால்வாய் மூலம் வரும் தண்ணீர் இதன் முக்கிய நீர் ஆதாரம்.
மேலும் ஆங்காங்கே பெய்யும் மழை நீர், சிறுஓடை, கால்வாய்கள் மூலமும் இதனை வந்தடையும்.
இந்நிலையில் கால்வாய்கள் அனைத்தும் முறையான பராமரிப்பு இல்லாமலும் துார்வாரப்படாததாலும் செடி,கொடிகள் முளைத்து கால்வாயை அடைத்துள்ளன.
இதனால் தண்ணீர் வந்து சேராமல் வேறு பகுதிக்கு செல்கிறது. இரும்பாடி, பாலகிருஷ்ணாபுரம், கருப்பட்டி உள்ளிட்ட பகுதிகளின் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக இது உள்ளது.
மேலும் இதன்மூலம் பல ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மூன்று முறை கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டது. நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுகின்றனர். மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

