/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வயல்களில் தேங்கியது தண்ணீர் விவசாயிகளிடம் வழிந்தது கண்ணீர் வடிகால் வசதி இல்லாததே காரணம்

ADDED : அக் 23, 2024 04:45 AM

மேலுார் : குழிச்செவல்பட்டியில் நான்கு வழிச்சாலையில் பெய்யும் மழை நீர் வெளியேற வடிகால் அமைக்காததால் மழை நீர் விளைநிலங்களில் தேங்கி பயிர்கள் அழுகுவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
மேலுார் - காரைக்குடி இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இச்சாலை அருகே 10 அடி பள்ளத்தில் நுாற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இதில் குழிச்செவல்பட்டியில் ராக்கம்மாள், நர்மதா, முத்துக்கிளி, மணிமாறன் உள்ளிட்ட ஏராளமானோர் பணப்பயிர்களான மஞ்சள், வாழை, கரும்பு, கருணை, கடலை பயிரிட்டுள்ளனர்.
புதிதாக அமைக்கப்படும் 4 வழிச்சாலையில் மழை நீர் வெளியேற வடிகால் வசதி இல்லை. இதனால் சமீபத்தில் ரோட்டில் பெய்த மழைநீர், விவசாய நிலங்களுக்குள் பாய்ந்து தேங்கி நிற்கிறது.
விவசாயி முத்துக்கிளி கூறியதாவது: ஆண்டு குத்தகைக்கு விவசாயம் செய்கிறோம். வாழை மற்றும் கரும்புக்கு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் செலவு செய்துள்ளோம். வாழைத் தார்கள் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் உள்ளன. இத்தருணத்தில் நான்கு வழிச்சாலையில் இருந்து வரும் மழை நீர் மாதக்கணக்கில் தேங்கி நிற்கிறது. இதனால் வாழைத் தார்கள் பெருக்காமல் சிறுத்து காணப்படுவதுடன், அழுகத் துவங்கியுள்ளது.
நான்கு வழிச்சாலையில் வடிகால் அமைக்காததே இதற்கு காரணம். வடிகால் அமைக்க வலியுறுத்தியும் யாரும் கண்டு கொள்ளவில்லை. வேளாண்துறையினர் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும். வடிகால் வசதி ஏற்படுத்த கலெக்டர் நடவடிக்கை தேவை என்றார்.