ADDED : ஜூலை 21, 2025 03:07 AM

வாடிப்பட்டி: 'நகரி - குமாரம் ரோட்டில் ஆனைக்குளம் கண்மாய் கரையில் விபத்து வளைவு பகுதியை அகலப்படுத்த வேண்டும்' என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த ரோட்டில் தினமும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள், கூலித் தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். சித்தாலங்குடியை அடுத்த ஆனைக்குளம் கண்மாய்க் கரையில் ரோட்டோரம் முனியாண்டி கோயிலும், 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆலமரமும் உள்ளது.
இப்பகுதி மிக குறுகலான வளைவுடன் இருப்பதால் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன.
உயிரிழப்புகளும் ஏற்படுள்ளது.
மழை நேரங்களில் கண்மாய் கரை மண் ரோட்டில் அடித்து செல்வதாலும் விபத்துக்கள் அதிகரிக்கிறது. மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. இப்பகுதி தொழிற்சாலைகளுக்கு லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்றுவருகின்றன.
இந்த வளைவு பகுதி கண்மாய் பகுதிக்குள்ளாக அகலப்படுத்தி தர வேண்டும்.
பறவைகள், பூச்சிகள் என பல்லுயிர் வசிப்பிடமாக உள்ள வயதான ஆலமரத்தை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.