
சோழவந்தான்: சோழவந்தான் அருகே ஊத்துக்குழியில் சேதமடைந்த தென்கரை - மேலக்கால் மெயின் ரோட்டை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தினர்.
அப்பகுதி முனியாண்டி கூறியதாவது: 6 மாதத்திற்கு முன் குடிநீர் குழாய்கள் பதிக்க பள்ளம் தோண்டினர். பள்ளங்களை சரியாக மூடவில்லை. இதனால் ரோடு மேடு பள்ளமாகி வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்பட்டது. மழையால் ரோடு முழுவதும் சேறும் சகதியுமாக மாறியது. சகதியில் நடக்கும் குழந்தைகள், பெண்கள், முதியோர் வழுக்கி விழுகின்றனர் என்றார்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: குடிநீர் வடிகால் வாரியம், திருமங்கலம் நகராட்சி சார்பில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிக்காக ரோட்டின் இருபுறமும் தோண்டப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்புதான் குடிநீர் வாரியத்தினர் பணிகளை முடித்து சீரமைப்புக்காக நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைத்தனர்.
திருமங்கலம் நகராட்சி சார்பில் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை. இதனால் சீரமைப்பு பணி தாமதமாகிறது. இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் சில வாரங்களில் பணிகள் முடிக்கப்படும் என்றனர்.

