/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
துாங்காநகரின் துயரம்; கேள்விக்குறியான பெரியார் பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுப்பித்தும் பலனில்லை
/
துாங்காநகரின் துயரம்; கேள்விக்குறியான பெரியார் பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுப்பித்தும் பலனில்லை
துாங்காநகரின் துயரம்; கேள்விக்குறியான பெரியார் பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுப்பித்தும் பலனில்லை
துாங்காநகரின் துயரம்; கேள்விக்குறியான பெரியார் பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுப்பித்தும் பலனில்லை
ADDED : டிச 18, 2024 07:23 AM

மதுரை: மதுரையின் முகமாக விளங்கும் பெரியார் பஸ் ஸ்டாண்ட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுப்பிக்கப்பட்டும் அடிப்படை வசதிகள் இன்றியும், கேள்விக்குறியாகும் பராமரிப்பு பணியாலும் பயணிகள் அவஸ்தைக்கு உள்ளாகின்றனர்.
இப்பஸ் ஸ்டாண்ட் ரூ.55 கோடியில் புதுப்பிக்கப்பட்டது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, நகரும் படிக்கட்டுகள், லிப்ட்கள், வணிக வளாக கட்டடங்கள், பயணிகளுக்கான இருக்கைகள், 57 பஸ்கள் நிறுத்தும் வகையிலான இடவசதி, சுரங்கப் பாதை, மதுரை பற்றிய வரைப்படங்கள், பஸ் டிரைவர்களுக்கான ஓய்வறைகள் என பல்வேறு வசதிகளுடன் உருவாக்கப்பட்டது. குறிப்பாக பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இப்பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது.
ஆனால் தற்போது சிறிய மழைக்கே பஸ் ஸ்டாண்ட் உள்ளேயும், வெளிப்பகுதியிலும் நீர் தேங்குவது, நடை மேடை பகுதியில் உள்ள டைல்ஸ் கற்கள் பல இடங்களில் பெயர்ந்துள்ளன. போதிய குடிநீர் கிடைக்காதது, பயணிகளுக்கான இருக்கைகள் தட்டுப்பாடு போன்ற பல பிரச்னைகளுடன் செயல்படுகிறது.
தற்போது ஒரு பிளாட்பாரத்தில் மட்டுமே குடிநீர் வசதி உள்ளது. குறிப்பாக பராமரிப்பும், அடிப்படை வசதிகளும் கேள்விக்குறியாகியுள்ளது.
குறிப்பாக பஸ் வழித்தடங்கள் அடங்கிய பட்டியல் இல்லை. பயணிகள் 4 நடைமேடைகளிலும் நடையாய் நடந்து தேடி அலைந்து தங்கள் ஊர் பஸ் எது என்று கண்டுபிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது.
நடைமேடைகளில் டைல்ஸ் கற்கள் பெயர்ந்து, அதன் அருகே உடைந்து ஒழுங்கற்று கிடப்பதால் பயணிகள் நடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். நீண்ட நாட்களாக பயன்பாட்டிற்கு இன்னும் வராமல் இருக்கும் இரண்டாம் தளத்திற்காக வைக்கப்பட்டுள்ள 'லிப்ட்'டில் சில நாட்களுக்கு முன் பெய்த மழையால் நடைமேடை நீரால் நிரம்பியது.
இதனால் பயணிகள் வழுக்கி விழுந்து சென்றனர். ஆனாலும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இதுபோல் இரவில் போதிய விளக்கு வசதியும் இல்லை. சில இடங்களில் பல்புகள் தொங்கிக்கொண்டிருக்கின்றன. பஸ்கள் நிற்பதற்கும் போதிய இடவசதி இல்லாததால் நெருக்கடியில் நிறுத்தப்படுகின்றன. எனவே இங்குள்ள பிரச்னைகளுக்கு தீர்வுகண்டு துாங்காநகரின் பெருமையை மாநகராட்சி மீட்டெடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்து கின்றனர்.
மாநகராட்சி உதவி பொறியாளர் ஆறுமுகம் கூறுகையில், பஸ் ஸ்டாண்டில் உரிய பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. 2 கழிப்பறைகள் உள்ள நிலையில் கூடுதலாக ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டைல்ஸ் கற்கள் மட்டும் பெயர்ந்துள்ளன. அது விரைவில் சரிசெய்யப்படும். மழை பெய்தால் மண் உள்ள இடத்தில் மட்டுமே நீர் தேங்குகிறது. அதுவும் சரிசெய்யப்படும் என்றார்.