/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நிமிர்ந்த திமில் செருக்கும் நேர்கொண்ட கூர் கொம்பும்
/
நிமிர்ந்த திமில் செருக்கும் நேர்கொண்ட கூர் கொம்பும்
நிமிர்ந்த திமில் செருக்கும் நேர்கொண்ட கூர் கொம்பும்
நிமிர்ந்த திமில் செருக்கும் நேர்கொண்ட கூர் கொம்பும்
ADDED : டிச 28, 2024 06:57 AM

மதுரை : நிமிர்ந்த திமில் செருக்கும் நேர்கொண்ட கூர்கொம்பும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நிமிர் பார்வையுமாக மதுரை மாடக்குளம் ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசல் பயிற்சி பெறுகின்றன.
ஜன.14ல் பொங்கலன்று மதுரை அவனியாபுரத்திலும் 15 ல் பாலமேடு, 16ல் அலங்காநல்லுாரிலுமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்டும். போட்டிக்கு இரண்டு மாதங்கள் முன்பாகவே காளைகளுக்கான பயிற்சி துவங்கிவிட்ட நிலையில் தினமும் நீச்சல், மண் குத்துதல் பயிற்சியில் ஈடுபடும் காளைகள் மதுரை மாடக்குளம் பகுதியில் வலம்வந்தன.
மாடக்குளம் பகுதியில் படித்த இளைஞர்கள் பாரம்பரியத்தை கைவிடாமல் வீடுகள் தோறும் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கின்றனர். பரிசு வெல்வதை விட பாரம்பரியத்தை காப்பதே எங்கள் ஜல்லிக்கட்டின் பெருமை என்கின்றனர் காளை உரிமையாளர்கள் முத்துகுமார், பிரதீப்குமார்.
அவர்கள் கூறியதாவது:
எல்லா கிடை மாட்டில் இருந்தும் கன்றுகளை எடுப்பதில்லை. கொம்பு அமைப்பு, உடல் அமைப்பைப் பார்த்து கன்றை தேர்வு செய்வோம். ஒரு கன்றின் 90 சதவீத குணம் தாயின் குணத்தை ஒத்திருக்கும். களத்தில் வீரர்களை சந்திப்பதற்கு சரியான வயது என்பது 6 கடைப்பற்கள் இருக்க வேண்டும். 2 பல், 4 பல் உடைய மாடுகளை அவிழ்த்து விட்டால் அது குழந்தையைப் போன்று தான் வலம் வரும்.
பெருமைக்காக ரூ.ஒரு லட்சம், ரூ.2 லட்சம் கொடுத்து ஜல்லிக்கட்டு மாட்டை வாங்கி போட்டிக்கு தயார் செய்ய மாட்டோம். மதுரை மாடக்குளத்தின் சிறப்பே கன்றுகளை வாங்கி அவற்றை வளர்த்து களத்தில் சந்திக்க வைப்பது தான். ஊர் பெயரையும் உரிமையாளர் பெயரையும் பெருமையாக சொல்ல வேண்டும் என்றால் கன்றில் இருந்து வளர்க்க வேண்டும். அதுவே எங்கள் தனித்துவம்.
மண்ணை குத்தி தயாராகும்
ஒற்றை திமில், தொங்குநாடி, ஏறி நிற்கும் வால், கொம்பு அளவைப் பொறுத்து நந்திக்கு உள்ள அமைப்பாகவே எங்கள் காளைகளை பார்க்கிறோம். ஆண்டில் ஆறு மாதங்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும், மீதி நாட்கள் வீட்டில் வளரும். கூடுதல் தீவனம் கொடுக்கும் போது மாடு இன்னும் திடகாத்திரமாக மாறிவிடும். மண்ணைப் பார்த்தவுடன் தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்தும் வகையில் கொம்பால் குத்தி கிளறும். மண்ணை குத்தும் போது கொம்புக்கு கூடுதல் இறுக்கம் கிடைக்கும். காலை வாரி செறுமி மண்ணை குத்துவது நாட்டு மாடுகளின் இயல்பு. வேற்று மனிதர்களை கண்டால் ஆக்ரோஷமாக செறுமும். மற்ற காளைகளிடமிருந்து தனித்துவமாக அடையாளப்படுத்துவதே நாட்டுமாடுகளின் திமில் தான்.
வாடிவாசலுக்கு ஏற்ப செயல்படும்
எங்களிடம் மூன்று காளைகள் வளர்கின்றன. குட்டிப்புலியை 2012 ல் கன்றாக வாங்கினோம். 2017 முதல் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று கார், பைக் தவிர அனைத்து பரிசுகளையும் வாங்கியுள்ளான். ஒவ்வொரு ஊரிலுள்ள வாடிவாசலுக்கு ஏற்ப குட்டிப்புலி தன்னை தயார்படுத்திக் கொள்ளும். ஒடுக்கமான வாடிவாசலில் உடனடியாக வெளிவராமல் வீரர்களை குத்துவது போல பயமுறுத்தி அசந்த நேரத்தில் பாய்ந்து வெளியேறும்.
எல்லா மாடுகளும் ஜெயிக்கக்கூடிய வாடிவாசலாக இருந்தால் தலைக்கு மேலே தாவிச் செல்லும். வீதிகள் அகலமில்லாத இடங்களில் திரும்பி வந்து வீரர்களை மிரட்டி செல்லும். கலெக்ஷன் பாயின்டில் மூக்கணாங்கயிறு எதுவுமின்றி சமர்த்து பிள்ளையாக கூடவே வந்து விடும்.
கருப்பு குதிரையும் ஏழாண்டுகளாக பரிசுகளை வென்று வருகிறான். மாறனுக்கு ஆறு வயதாகிறது, இந்தாண்டு முதல் போட்டிக்கு தயாராகி வருகிறான்.
யானைக்கு எப்படி பாகனோ அதுபோல காளைக்கும் ஒருவர் மட்டுமே பயிற்சி, உணவு தரவேண்டும். எல்லோரையும் தொட்டு பழகவிட்டால் ரோஷம் கெட்டு களத்தில் எளிதாக தோற்றுவிடும். நாங்கள் காளைகளை வீட்டில் வைத்து வளர்த்தாலும் எங்களை மட்டுமே அருகில் வர அனுமதிக்கும். அப்போது தான் களத்தில் நின்று விளையாடும்.
ரூ.பல லட்சம் முதலீடு செய்து மனித வாசனையே இல்லாமல் காளையை வளர்த்து ஒரே ஒருமுறை களத்தில் இறக்கி கார், பைக் ஜெயிப்பது பெருமையல்ல. அது பிசினஸ். ஆண்டுதோறும் காளைகள் களம் காணவேண்டும், அதுதான் உண்மையான ஜல்லிக்கட்டு போட்டி. அந்த பாரம்பரியத்திற்காகவே காளைகளை உருவாக்குகிறோம் என்றனர்.