/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வைகையாறு பெயரைச் சொல்லி வசூல் செய்யும் அமைப்புகள்; தடையில்லா சான்றுக்கு நீர்வளத்துறை கடிவாளம் தேவை
/
வைகையாறு பெயரைச் சொல்லி வசூல் செய்யும் அமைப்புகள்; தடையில்லா சான்றுக்கு நீர்வளத்துறை கடிவாளம் தேவை
வைகையாறு பெயரைச் சொல்லி வசூல் செய்யும் அமைப்புகள்; தடையில்லா சான்றுக்கு நீர்வளத்துறை கடிவாளம் தேவை
வைகையாறு பெயரைச் சொல்லி வசூல் செய்யும் அமைப்புகள்; தடையில்லா சான்றுக்கு நீர்வளத்துறை கடிவாளம் தேவை
ADDED : அக் 06, 2024 04:39 AM

மதுரை : வைகையாற்றை சுத்தப்படுத்துவதாக நிறுவனங்களிடம் வசூல் செய்யும் அமைப்புகள் மீது நீர்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேனி மாவட்டம் மூல வைகையில் இருந்து ராமநாதபுரம் பெரிய கண்மாய் வரையான 258 கிலோமீட்டர் நீளத்திற்கு வைகையாறு பாய்கிறது. மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு பயன்படுகிறது. மூலவைகையில் தொடங்கி அப்பகுதி குடியிருப்புகளின் கழிவுநீரும், குப்பையும் வைகையில் சேர ஆரம்பிக்கிறது.
பெரும்பாலான இடங்களில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்தும் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்தும் உள்ளது. 248 கி.மீ., நீளத்திற்கான ஆற்றை ஒரே நேரத்தில் சுத்தப்படுத்துவதற்கான நிதி நீர்வளத்துறையிடம் இல்லை. அதனால் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் ஆற்றை சுத்தப்படுத்துவதற்கு விருப்பப்பட்டு முன்வருகின்றன.
அப்படி வரும் நிறுவனங்கள் பிற நிறுவனங்களிடமோ, தனிநபர்களிடமோ நன்கொடை என்ற பெயரில் நிதி வசூலிக்கக்கூடாது. அதையும் மீறி விளம்பரத்திற்காக ஆற்றை சுத்தப்படுத்துவதாக கூறி மதுரையில் உள்ள சில அமைப்புகள் நிறுவனங்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக புகார் எழுந்தன.
இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வைகையாற்றை சுத்தப்படுத்தும் பணிக்கு அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகளை வரவேற்கிறோம். எங்களிடம் அனுமதி பெற வரும் போது சில நிபந்தனைகளை விதித்தே தடையில்லா சான்று வழங்குகிறோம். ஆற்றின் எந்த இடத்தில் இருந்து எந்த இடம் வரை எத்தனை கி.மீ., நீளத்திற்கு சீமை கருவேல மரங்களையோ, ஆகாயத்தாமரை செடிகளையோ அகற்ற வேண்டும் என சான்றிதழில் குறிப்பிடுகிறோம்.
நீர்வளத்துறை பொறியாளரின் ஆலோசனையின் பெயரில் தான் அகற்றப்பட வேண்டும். ஆற்றில் உள்ள பிற மரங்களை அகற்றுவதற்கு அனுமதியில்லை. ஆற்றின் கரை மற்றும் உள்ளிருக்கும் கட்டுமானத்திற்கு சேதம் ஏற்படுத்தக்கூடாது. துாய்மைப்பணி செய்யப் போகும் தேதியை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். ஆற்றில் இருந்து மண் எடுக்கக்கூடாது. விருப்பத்தின் பேரில் துாய்மைப்பணி என்பதால் துறையின் மூலம் நிதி கேட்கமுடியாது. பிற நிறுவனங்களிடம் நிதியைப் பெறுவதற்கு இந்த தடையில்லா சான்று அனுமதியை பயன்படுத்தக்கூடாது.
ஆற்றில் மேடை, பந்தல் அமைத்து விழா நடத்தக் கூடாது. துாய்மை பணி செய்ததாக கூறி எந்தவித சலுகையும் கோர முடியாது. சான்று வழங்கும் தேதியில் இருந்து 2 மாதங்கள் மட்டுமே துாய்மைப்பணி செய்ய முடியும். இந்த நிபந்தனைகள் மீறும் போது தடையில்லா சான்று முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளோம்.
எங்களிடம் துாய்மைப்பணிக்கு விண்ணப்பித்த ஒரு அமைப்புக்கு மதுரையில் தெப்பக்குளம் முதல் விரகனுார் வரையுள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற அனுமதி வழங்கப்பட்டது. அந்த அமைப்பினர் மதுரை ஆதீனத்திடம் நிதி கேட்டதாக புகார் எழுந்தது. விருப்பத்தின் பேரில் மரங்களை அகற்றும் கருவியோ அதற்கான நிதியோ இருந்தால் மட்டுமே துாய்மைப்பணி செய்ய வேண்டும். எனவே இந்த அமைப்புக்கான தடையில்லா சான்றை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.