ADDED : செப் 09, 2024 04:51 AM
மாவட்டத்தில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
கிராமப் புறங்களில் இருந்து அதிக எண்ணிக்கையில் பள்ளிக்கு வருகின்றனர். மதுரை நகரை சுற்றியுள்ள பகுதியில் இருந்து நகருக்குள் உள்ள பள்ளிகளுக்கு தினமும் வந்து செல்கின்றனர்.
ஆனால் இவர்களுக்கான பஸ்கள் போதிய எண்ணிக்கையில் இயக்கப்படுவதில்லை. காலை நேரம் பள்ளி செல்ல நிறுத்தங்களில் காத்திருக்கும் மாணவர்களை பஸ்சை நிறுத்தி பெரும்பாலான டிரைவர்கள் ஏற்றிச் செல்வதும் இல்லை. இதனால் கிடைக்கும் பஸ்களில் ஏறி கூட்ட நெரிசலிலும், படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு மாணவர்கள் செல்வது அதிகரித்துள்ளது.
குறிப்பாக கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி, வள்ளாலப்பட்டி, கருவேலம்பட்டி, வடக்கம்பட்டி, வடபழஞ்சி, திருமால், வீரப்பெருமாள்புரம், சின்னஉலகாணி, அய்யூர், செங்கப்படை, ரெங்கபாளையம், அம்மாபட்டி, டி.ராமநாதபுரம், கிருஷ்ணாபுரம் உள்பட பெரும்பாலான பகுதிகளுக்கு பஸ்கள் சரியாக வருவதில்லை.
இதுபோல் நகரில் காலை நேரம் மாட்டுத்தாவணியில் இருந்து திருமங்கலத்திற்கு போதிய பஸ்கள் இல்லை.
இவ்வழித்தடத்தில் தான் பெரும்பாலான பள்ளிக் கல்லுாரிகள் உள்ளன. பஸ் வசதிகள் கேட்டு அமைச்சர்கள், கலெக்டர் என பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் மாணவர்கள் வேன், ஷேர் ஆட்டோக்களில் பயணிக்க வேண்டியுள்ளது.
போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ''பஸ்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. புதிய வழித்தடங்களில் பஸ்கள் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இருக்கும் பஸ்களை வைத்து சமாளியுங்கள் என்பது மட்டுமே உயர் அதிகாரிகளின் உத்தரவாக உள்ளது. ஒரு வழித்தடத்திற்கு அதிக பஸ் தேவை என்றால் ஏதாவது ஒரு வழித்தடத்தில் இயங்கும் பஸ்சைதான் மாற்றிவிட்டு வருகிறோம். இருப்பதை வைத்து தான் சமாளிக்கிறோம். கூடுதல் பஸ்கள் கேட்டு அரசிடம் வலியுறுத்தி உள்ளோம் என்றனர்.