/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பிப்.,10 மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் என்னமோ திட்டம் இருக்கு! மார்க்சிஸ்ட் கட்சியை 'அடக்க' தி.மு.க., வியூகம்
/
பிப்.,10 மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் என்னமோ திட்டம் இருக்கு! மார்க்சிஸ்ட் கட்சியை 'அடக்க' தி.மு.க., வியூகம்
பிப்.,10 மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் என்னமோ திட்டம் இருக்கு! மார்க்சிஸ்ட் கட்சியை 'அடக்க' தி.மு.க., வியூகம்
பிப்.,10 மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் என்னமோ திட்டம் இருக்கு! மார்க்சிஸ்ட் கட்சியை 'அடக்க' தி.மு.க., வியூகம்
UPDATED : பிப் 06, 2026 08:59 AM
ADDED : பிப் 06, 2026 06:22 AM

மதுரை: மதுரை மாநகராட்சியில் மேயர் இல்லாததால் பிப்.,10ல் மார்க். கம்யூ., துணைமேயர் நாகராஜன் தலைமையில் கவுன்சில் கூட்டம் நடக்கவுள்ளது. துணைமேயர் தலைமையில் கூட்டமா என தி.மு.க., கவுன்சிலர்கள் கடும் அதிருப்தி தெரிவிக்கும் நிலையில், விவாதமின்றி கவுன்சில் கூட்டத்தை நடத்தி முடிக்கும் முடிவில் ஆளுங்கட்சி உள்ளது.
மாநகராட்சியில் நடந்த ரூ.150 கோடி சொத்துவரி முறைகேடு எதிரொலியாக கடந்த அக்டோபரில் மேயர் பதவியை இந்திராணி ராஜினாமா செய்தார். 5 மண்டல தலைவர்கள், 2 நிலைக் குழுத் தலைவர்களும் ராஜினாமா செய்தனர். வழக்கு விசாரணையில் உள்ளதால் புதிய மேயரை தேர்வு செய்ய ஆளுங்கட்சி ஆர்வம் காட்டவில்லை. ஆனால் புதிய மேயர், மண்டல தலைவர்களை தேர்வு செய்ய வேண்டும் என கவுன்சிலர்கள் தொடர்ந்து தி.மு.க., தலைமையை வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே மூன்று மாதங்களாக கவுன்சில் கூட்டம் நடக்கவில்லை என சர்ச்சை எழுந்தது. இக்கூட்டம் நடந்தால் மார்க். கம்யூ., கட்சியை சேர்ந்த துணைமேயர் தலைமையில் தான் நடத்த வேண்டும். 69 தி.மு.க., கவுன்சிலர்களை கொண்டு மெஜாரிட்டியாக இருக்கும்போது 4 கவுன்சிலர்களை கொண்ட மார்க்சிஸ்ட் கூட்டத்தை நடத்துவதா என உள்ளூர் தி.மு.க.,வுக்குள் ஏற்பட்ட 'ஈகோ'வால் கூட்டத்தை நடத்தாமல் தள்ளிப்போடப்பட்டது.
இந்நிலையில் பொதுநல வழக்கு ஒன்றில், துணை மேயர் தலைமையில் கவுன்சில் கூட்டத்தை நடத்த நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து பிப்.,10ல் நடத்த மாநகராட்சி உறுதியளித்தது. நீதிமன்ற உத்தரவை பின்பற்ற வேண்டிய கட்டாயம் மாநகராட்சிக்கு ஏற்பட்ட நிலையில், அதற்குள் தி.மு.க., சார்பில் புதிய மேயரை தேர்வு செய்ய வேண்டும் என அக்கட்சி கவுன்சிலர்கள் தலைமை கவனத்திற்கு கொண்டு சென்றனர். சிலர், ஜன.,30, 31ல் மதுரை வந்த முதல்வர் ஸ்டாலினிடம் நேரடியாக கடிதங்களும் அளித்தனர். ஆனாலும் இதுவரை எந்த அறிகுறியும் இல்லை.
அதேநேரம் பிப்.,10ல் துணைமேயர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் பங்கேற்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து மூன்று மாவட்ட செயலாளர்களும் இதுவரை தகவல் தெரிவிக்கவில்லை. குழப்பமாக உள்ளது என கவுன்சிலர்கள் கொந்தளித்தனர்.
தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: துணைமேயர் தலைமையில் விவாதம் நடந்தால் கூட்டத்தை தி.மு.க., கவுன்சிலர்கள் புறக்கணிக்கும் மனநிலையில் உள்ளனர். கட்சி கட்டுப்பாடு கருதி கையெழுத்து மட்டுமிடும் திட்டத்தில் உள்ளனர். விவாதம் நடந்தால் தி.மு.க., - மார்க்சிஸ்ட் கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டால், அது கூட்டணிக்குள் நெருடலை ஏற்படுத்தும். இதை தவிர்க்க நினைக்கிறோம்.
நீதிமன்றத்திற்கு உறுதியளித்தபடி பிப்.,10ல் கூட்டம் நடக்கும். அன்று மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதை மாமன்ற செயலாளர் வாசிப்பார். அது முடிந்ததும் விவாதமின்றி கூட்டத்தை சில நிமிடங்களில் நிறைவு செய்யும் திட்டம் உள்ளது. அரசியல் சூழல் கருதி மார்க்சிஸ்ட் இதற்கு ஒத்துழைக்கும் என நம்புகிறோம் என்றனர்.

