/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தென்னையில் வெள்ளை ஈக்களா கட்டுப்படுத்த வழி இருக்கு
/
தென்னையில் வெள்ளை ஈக்களா கட்டுப்படுத்த வழி இருக்கு
தென்னையில் வெள்ளை ஈக்களா கட்டுப்படுத்த வழி இருக்கு
தென்னையில் வெள்ளை ஈக்களா கட்டுப்படுத்த வழி இருக்கு
ADDED : பிப் 20, 2025 05:32 AM
மதுரை: தென்னை மரங்களில் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்கி சேதம் விளைவிப்பதால் ஒரு லிட்டர் தண்ணீரில் 5 மில்லி வேப்ப விதை சாறு கலந்து தெளிக்கலாம் என தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பிரபா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: கொட்டாம்பட்டி, வாடிப்பட்டி, அலங்காநல்லுாரில் அதிகளவிலும் மற்ற பகுதிகளில் சிறிய பரப்பளவு என 10,200 எக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. தென்னையில் 'ரூகோஸ்' சுருள் வெள்ளை ஈக்கள் என்னும் புதிய சாறு உறிஞ்சும் பூச்சி தாக்குதலை ஏற்படுத்துகிறது.
தாக்கப்பட்ட இலைகளின் உட்பகுதியில் சுருள் சுருளாக நீள்வட்ட வடிவில் ஓலைகளில் முட்டைகள் காணப்படும். பாதித்த பகுதிகளில் தண்ணீரை வேகமாக பீய்ச்சி அடித்து அவற்றை வெளியேற்ற வேண்டும். 'என்கார்சியா' என்ற ஒட்டுண்ணி குளவிகள் உள்ள தென்னை ஓலைகளை ஏக்கருக்கு 10 இலைத்துண்டுகள் வீதம் தாக்கப்பட்ட ஓலைகளின் மீது இணைத்து கட்டுப்படுத்தலாம். இந்த ஒட்டுண்ணிகள் கோவை ஆழியார் நகர் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் கிடைக்கும்.
கிரைசோபிட் அல்லது அப்பர்டோக்கிரைசா அஸ்டர் என்ற இரைவிழுங்கி முட்டைகளை ஏக்கருக்கு 400 வீதம் தாக்கப்பட்ட ஓலைகளின் மீது இணைத்து கட்டுப்படுத்தலாம். இரை விழுங்கிகள் மதுரை வேளாண் கல்லுாரியில் கிடைக்கும்.
மஞ்சள் நிற ஒட்டுப்பொறிகள் ஏக்கருக்கு 8 முதல் 15 வரை வைத்து 15 நாட்களுக்கு ஒரு முறை பொறி கருவியை சுத்தம் செய்ய வேண்டும். தாக்குதல் காணப்பட்டால் ஒரு லிட்டர் தண்ணீரில் 5 மில்லி வேப்ப விதை சாறு கலந்து தெளிக்கலாம்.
பின்விளைவாக ஏற்படும் கரும்பூசணத்தை கட்டுப்படுத்த 5 லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ மைதா மாவை கொதிக்க வைத்து அதன்பின் 20 லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிக்க வேண்டும். புதிதாக தென்னந்தோப்பு உருவாக்குபவர்கள் இடைவெளி விட்டு ஒரு எக்டேருக்கு 175 கன்றுகள் நட வேண்டும் என்றார்.

