/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை நகரின் போக்குவரத்து நெரிசல் தீர வழி இருக்கு: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா
/
மதுரை நகரின் போக்குவரத்து நெரிசல் தீர வழி இருக்கு: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா
மதுரை நகரின் போக்குவரத்து நெரிசல் தீர வழி இருக்கு: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா
மதுரை நகரின் போக்குவரத்து நெரிசல் தீர வழி இருக்கு: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா
ADDED : ஜூன் 05, 2025 01:24 AM

மதுரை: மதுரையில் நெரிசலுக்கு தீர்வு காண போக்குவரத்துத் துறையினர் சில ஆலோசனைகளை தெரிவித்துள்ளனர்.
மாட்டுத்தாவணி பகுதியில் பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட், கீழவெளிவீதி, பெரியார் பஸ்ஸ்டாண்ட் என பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.
இதை சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் நடத்தும் சாலை பாதுகாப்பு கூட்டங்களில் போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்து வருகின்றனர். அதில் சில மட்டுமே நடைமுறைப்படுத்தப்படுகிறது.
போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: மாட்டுத்தாவணியில் வேளாண் வணிகவளாகம், பூ, பழம், காய்கறி, மீன் சந்தைகள் உள்ளன. அப்பகுதியில் மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள், ஆம்னி பஸ் ஸ்டாண்ட் உள்ளன.விரைவில் டைடல் பார்க் வர உள்ளது. மெயின்ரோட்டில் போக்குவரத்து அதிகரித்துள்ளதால் பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் எளிதாக சென்று திரும்ப வழியில்லை.
எனவே பஸ்ஸ்டாண்டுக்குள் பஸ்கள் செல்லும் வழியை பின்புறமாக அமைக்கலாம். மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு பின்புறமாக மேற்கு நோக்கி ரோடு அமைத்து ரிங் ரோடு வழியாக பஸ் ஸ்டாண்டுக்குள் வர ஏற்பாடு செய்யலாம். இதனால் பஸ்ஸ்டாண்ட் முன்புறம் நெரிசல் குறையும்.
அதேபோல ஆரப்பாளையம் பஸ்ஸ்டாண்டை நகருக்கு வெளியே சமயநல்லுார் பகுதிக்கு கொண்டு செல்லலாம். இதனால் நகருக்குள் நெரிசல் குறையும். ஆரப்பாளையம் பஸ்ஸ்டாண்டை தேனி பஸ்கள், டவுன் பஸ்களுக்கு பயன்படுத்தலாம்.
நகருக்குள் ஆங்காங்கே 'மல்டி லெவல் பார்க்கிங்' வசதி ஏற்படுத்த வேண்டும். அவற்றின் இடவசதி குறித்து அறிய, நகரின் பல பகுதிகளில் 'கியூ.ஆர்.' கோடு அமைத்து பயணிகளை நகருக்குள் கட்டுப்படுத்தலாம்.
ஏற்கனவே இதை சித்திரைத்திருவிழாவின்போதும், சபரிமலை சீசன் போதும் போலீசார் பயன்படுத்தினர்.
இதுபோன்ற 20 ஆண்டுகளுக்கான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தும் சென்னையில் உள்ள 'கும்டா' (சென்னை யுனிபைட் மெட்ரோபாலிடன் டிரான்ஸ்போர்ட் அத்தாரிட்டி) என்ற அமைப்பிடமும் நகரின் வளர்ச்சிக்கான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவற்றை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.