/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தவிக்கும் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள்; பொறுப்பு அலுவலர்களால் பணிகளில் பாதிப்பு
/
தவிக்கும் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள்; பொறுப்பு அலுவலர்களால் பணிகளில் பாதிப்பு
தவிக்கும் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள்; பொறுப்பு அலுவலர்களால் பணிகளில் பாதிப்பு
தவிக்கும் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள்; பொறுப்பு அலுவலர்களால் பணிகளில் பாதிப்பு
UPDATED : ஆக 07, 2025 08:35 AM
ADDED : ஆக 07, 2025 06:52 AM

மதுரை: மதுரையில் உள்ள 3 வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் (ஆர்.டி.ஓ.,) வாகன ஆய்வாளர்கள் இல்லாததால் பணிகளில் அதிகளவில் சுணக்கம் ஏற்படுகிறது.
மதுரையில் வடக்கு, தெற்கு, மத்தி என 3 ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் வாகன ஆய்வாளர்கள் நியமனம் இல்லாததால் பணிகள் பாதிக்கின்றன. வடக்கு அலுவலக ஆய்வாளர் முரளிதரன் மேலுார் 'யூனிட்'டுக்கு மாற்றப்பட்டார்.
அவர் மேலுாருடன், வாடிப்பட்டி யூனிட், மதுரை வடக்கு அலுவலகங்களையும் கூடுதலாக கவனிக்கிறார். மதுரை தெற்கு ஆய்வாளர் செல்வம் வேடசந்துாருக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சுமையானது பணிகள் மதுரை மத்திய அலுவலக ஆய்வாளர் மனோகரன் திருச்சி அமலாக்க பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதில் பொறுப்பு அலுவலராக உத்தமபாளையம் ஆய்வாளர் சுந்தரராமன் நியமிக்கப்பட்டார். இவர் அங்கேயும், இங்கேயும் வந்து செல்கிறார். இந்த மூன்று அலுவலகங்களிலும் தினமும் தலா 50 முதல் 125 வாகனங்கள் பதிவுக்கு வருகின்றன. டிரைவிங் லைசென்ஸ், புதுப்பித்தல், ரோடுகளில் வாகனங்களை கண்காணித்தல், சோதனை செய்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என பணிகள் அதிகமுள்ளன.
ஒவ்வொரு அலுவலகத்திலும் 3 முதல் 5 ஆய்வாளர்கள் தேவை. தற்போது அனைத்து அலுவலகங்களிலும் பொறுப்பு வாகன ஆய்வாளர்களே உள்ளனர். யாராவது ஒருவர் விடுப்பு எடுத்தால் பணிகளில் தேக்கமும், சுணக்கமும் ஏற்பட்டு விடுகிறது. இவ்வாறு ஓராண்டுக்கும் மேலாக பணிகள் கடுமையாக பாதிக்கின்றன. இதுபோன்ற காரணங்களால் புரோக்கர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
கண்டுகொள்ள யாருமில்லை ஒவ்வொரு அலுவலகத்தின் கீழும் 30 முதல் 40 டிரைவிங் ஸ்கூல்கள் செயல்படுகின்றன. இவர்களிடம் டிரைவிங் பயில்வோருக்கு 'டெஸ்ட்' நடத்த ஆட்கள் இல்லை. வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி என 3 நாட்களில் வரும்படி கூறுகின்றனர். அந்த நாட்களில் அனைத்து பயிற்சி பள்ளி மாணவர்களையும் முழுமையாக சோதனை செய்ய முடியவில்லை. இதனால் பள்ளி நிர்வாகங்கள் திணறுகின்றன. ஆர்.டி.ஓ., அலுவலகங்களின் பணிச்சுமையை வாய்ப்பாக பயன்படுத்தி புரோக்கர்களின் ஆதிக்கமும் அதிகரித்துள்ளது.
புதிதாக பொறுப்பேற்ற போக்குவரத்துத் துறை கமிஷனர் கஜலட்சுமியாவது நடவடிக்கை எடுப்பாரா என இத்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.