ADDED : மே 18, 2025 02:58 AM

மேலுார்: திருவாதவூர் பகுதியில் குறைந்த அளவில் மின்சாரம் விநியோகிக்கப்படுவதால் மின்சாதனங்கள் பழுதாவதோடு மக்களின் அன்றாட வாழ்க்கை சிரமமாகவே உள்ளது.
திருவாதவூர் மின்வாரிய அலுவலகம் மூலம் உலகுபிச்சம்பட்டி, புதுப்பட்டி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள், வயல்வெளிகளில் மோட்டார் இணைப்புகளுக்கு மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. இப்பகுதியில் ஆண்டுகணக்கில் குறைந்த அளவு மின்சாரமே வருவதாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை என்பது குற்றச்சாட்டு.
மக்கள் கூறியதாவது:
மின்சாரம் குறைவாக வருவதால் டியூப் லைட் வெளிச்சம் குறைவாக உள்ளது. மின்விசிறி சுற்றினாலும் காற்று வரவில்லை. குறைந்த மின்சாரத்தால் நெல், வாழை பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் கருக ஆரம்பித்துள்ளன. மிக்ஸி உள்ளிட்ட சாதனங்கள், சரிவர வேலை செய்யாததால் வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்திற்குள் உணவு சமைக்க முடியவில்லை. குறைந்த அழுத்தத்தால் மின் சாதனங்கள் பழுதாவதால் அதிகாரிகள் தேவையான அளவில் மின்சாரம் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், விசாரித்து மின் சப்ளை கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.