/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பல மாதங்களாக ரயில்களை 'டைவர்ட்' செய்வதற்கு முடிவே இல்லையா: பண்டிகை நேரத்திலும் சீரமைப்பு பணிகளால் பாதிப்பு
/
பல மாதங்களாக ரயில்களை 'டைவர்ட்' செய்வதற்கு முடிவே இல்லையா: பண்டிகை நேரத்திலும் சீரமைப்பு பணிகளால் பாதிப்பு
பல மாதங்களாக ரயில்களை 'டைவர்ட்' செய்வதற்கு முடிவே இல்லையா: பண்டிகை நேரத்திலும் சீரமைப்பு பணிகளால் பாதிப்பு
பல மாதங்களாக ரயில்களை 'டைவர்ட்' செய்வதற்கு முடிவே இல்லையா: பண்டிகை நேரத்திலும் சீரமைப்பு பணிகளால் பாதிப்பு
ADDED : அக் 11, 2025 04:23 AM

மதுரை: மதுரை ரயில்வே கோட்டத்தில் நடக்கும் சீரமைப்புப் பணிகளால்செங்கோட்டை - மயிலாடுதுறை, குருவாயூர் - சென்னை எழும்பூர் உள்ளிட்ட முக்கிய ரயில்கள் மதுரை வராமல் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன. மாதக்கணக்கில் இந்நிலை நீடிப்பதால், 'இதற்கு முடிவே கிடையாதா' என பயணிகள் புலம்புகின்றனர். மதுரைக் கோட்டத்தில் ரயில்களை 130 கி.மீ., வேகத்தில் இயக்க, பல்வேறு பிரிவுகளில் தண்டவாள சீரமைப்புப் பணிகள் நடக்கின்றன. இதையொட்டி, கூடல்நகர் - சமயநல்லுார் - சோழவந்தான் பிரிவில், அக். 19, 20 மற்றும் புதன் தவிர மற்ற நாட்களில் காலை 8:15 முதல் மதியம் 12:15 மணி வரை, செவ்வாய் கிழமைகளில் காலை 7:25 முதல் 11:25 வரை, தினமும் 4 மணி நேரம் பணிகள் நடக்கின்றன.
முக்கிய ரயில்கள் ரத்து இதனால் மதுரை வழியாக இயக்கப்படும் ஈரோடு - செங்கோட்டை - ஈரோடு (16845/16846) ரயில்கள், செங்கோட்டை - திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன. செங்கோட்டை - மயிலாடுதுறை (16848), குருவாயூர் - சென்னை எழும்பூர் (16128) ரயில்கள், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன.
கடந்தாண்டு முதலே மயிலாடுதுறை ரயில் (16848) மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதால், ராஜபாளையம், சிவகாசி பயணிகள் மதுரை வருவதற்கு விருதுநகரில் இறங்கி பஸ்களில் வருகின்றனர். தற்போது குருவாயூர் ரயிலும் (16128), மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதால், மதுரை பயணிகள் பகலில் சென்னை செல்லும் ஒரேயொரு வாய்ப்பும் பறிபோகிறது.
திருச்சி செல்வதற்கு கூட (பிரீமியம் ரயில் தவிர்த்து) காலை 6:45 மணி வைகை ரயிலுக்கு பின் மாலை 4:50 மணிக்கே இன்டர்சிட்டி ரயில் உள்ளது. இதனால் பண்டிகை காலத்தில் வெளியூர் செல்லும் பயணிகள், வியாபாரிகள் அவதிப்படுகின்றனர். ஒரு மாதத்தில் அதிகபட்சம் 8 கி.மீ., பணிகள் நடக்கின்றன. இவ்வகையில் திருச்சி வரை பணிகள் முடிய அடுத்தாண்டு வரை ஆகலாம். அதுவரை பகல் நேர ரயில்களை மாற்றுப் பாதையில் இயக்கினால் ரயில் போக்குவரத்தை நம்பியுள்ள பயணிகள் அவதிக்குள்ளாவர்.
தீர்வுதான் என்ன செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில், வழக்கமாக மதியம் 1:20 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டுச் செல்கிறது. மதியம் 1:10 மணிக்கு திருச்சி - மயிலாடுதுறை இடையே 'மெமு' ரயில் இயக்கப்படுவதால், 10 நிமிடம் பின்னால் வரும் இந்த ரயில், திருச்சியில் இருந்து கூட்டமின்றி செல்கிறது.
எனவே பராமரிப்பு பணியை 3 மணி நேரமாக குறைத்தால், காலை 10:15 மணிக்கு மதுரை வரும் மயிலாடுதுறை ரயிலை, ஒரு மணி நேரம் தாமதமாக திருச்சிக்கு இயக்கலாம். காலை 11:20 மணிக்கு மதுரை வரும் குருவாயூர் - எழும்பூர் ரயிலையும் நேர் வழியில் இயக்க முடியும். இதனால் திருச்சி, சென்னைக்கு பயணிகள் செல்ல பகலில் ரயில் வசதி கிடைக்கும்.
''பயணிகள் வசதிக்காக 'சிறப்பு' ரயில்கள் இயக்கப்பட்டாலும், வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே பணி நேரத்தை குறைப்பதால் சீரமைப்பு பணிகள் முடிவுற மாதங்கள் கூடுதலானாலும், பயணிகளுக்கு ரயில் சேவை தடையின்றி கிடைக்கும்'' என்கின்றனர் ரயில் ஆர்வலர்கள்.