/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குடிநீர் குழாயை சீரமைக்க யாருமில்லையே
/
குடிநீர் குழாயை சீரமைக்க யாருமில்லையே
ADDED : ஜூன் 20, 2025 12:25 AM
மதுரை: மதுரை கரும்பாலை பகுதியில் குடிநீர் குழாய் பணிக்காக தோண்டியபோது சேதமடைந்த பழைய குடிநீர் குழாய்களை மாநகராட்சியினர் கண்டு கொள்ளாததால் அப்பகுதியினர் தவிப்பில் உள்ளனர்.
கரும்பாலை பகுதியில் புதிய திட்டத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக ரோட்டை தோண்டி வந்தனர். அப்போது பழைய திட்டத்தில் ஏற்கனவே பதித்திருந்த குழாய்கள் சேதமடைந்தன. இப்பணிகள் நடந்து ஒரு வாரமாகியும் சீரமைக்கவில்லை. தோண்டிய மண்குவியல் ரோட்டை அடைத்து மேடு, பள்ளமாக காட்சியளிக்கின்றன. பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் ரோட்டில் செல்ல முடியவில்லை.
குழாய் உடைப்பெடுத்ததால் இப்பகுதிக்கு தண்ணீர் வருவதும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தாகத்தில் தவிக்கும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இருப்பினும் கண்டுகொள்ள ஆளில்லை என வேதனை தெரிவித்தனர்.
அப்பகுதியைச் சேர்ந்த தமிழ்நாடு வணிகர்கள் பேரவையின் மதுரை மண்டல தலைவர் மைக்கேல்ராஜ் கூறுகையில், ''ரோட்டில் நடமாடவும் முடியவில்லை. தண்ணீரும் கிடைக்கவில்லை. இதுபோல சாக்கடை குழாய் பதிக்க என ஒன்றரை ஆண்டுகளாக ரோட்டை தோண்டுவதும், மூடுவதுமாக உள்ளனர்.
இதனால் நிரந்தர ரோடு வசதி இன்னும் இல்லை. மேலும் அருகே மழைநீர் வடிகால் ஓடையில் பிளாஸ்டிக் குவியலுடன் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் எடுப்பதால் கொசுக்கள் உருவாகி பகலிலேயே மக்களை கடிக்கின்றன. உடனடி நடவடிக்கை தேவை'' என்றார். கண்டு கொள்ளுமா மாநகராட்சி.