/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
களையெடுக்க ஆளில்லை... நுாறுநாள் வேலை திட்டத்தால் விவசாயப்பணிகள் பாதிப்பு;
/
களையெடுக்க ஆளில்லை... நுாறுநாள் வேலை திட்டத்தால் விவசாயப்பணிகள் பாதிப்பு;
களையெடுக்க ஆளில்லை... நுாறுநாள் வேலை திட்டத்தால் விவசாயப்பணிகள் பாதிப்பு;
களையெடுக்க ஆளில்லை... நுாறுநாள் வேலை திட்டத்தால் விவசாயப்பணிகள் பாதிப்பு;
UPDATED : ஜன 25, 2025 07:29 AM
ADDED : ஜன 25, 2025 07:02 AM

மதுரை: நுாறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தால் நெல் சாகுபடியின் போது களையெடுக்க ஆளில்லாமல் விவசாயம் பாதிக்கப்படுவதாக கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் சங்கீதாவிடம் விவசாயிகள் முறையிட்டனர்.
இக்கூட்டத்தில் டி.ஆர்.ஓ. சக்திவேல், வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ், நீர்வளத்துறை செயற்பொறியாளர் பாரதிதாசன், கூட்டுறவு இணைப்பதிவாளர் சதீஷ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சாந்தி கலந்து கொண்டனர். விவசாயிகள் பேசியதாவது:
சீத்தாராமன், வாடிப்பட்டி: கச்சைக்கட்டி புதுக்குளம் வரத்து கால்வாயை சீர்செய்ய வேண்டும். காலியிடத்தின் அளவை குறைத்துள்ளதால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பூபதி, திருப்பரங்குன்றம்: தென்கால் கண்மாய் பாசன கால்வாய் ஆக்கிரமிப்பில் உள்ளது. படிவம் 1 வழங்கியும் நீர்வளத்துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை. நிலையூரில் இருந்து வரும் கார்த்திகை பாதை அடைபட்டுள்ளதால் பக்தர்கள் 5 கி.மீ. சுற்றி வருகின்றனர்.
ரவி, கொட்டக்குடி: பெரியாறு பிரதான கால்வாய் 10வது கிளை கால்வாயில் தண்ணீர் தர ஏற்பாடு செய்ய வேண்டும். எந்தெந்த மடை மராமத்து செய்ய வேண்டுமென நீர்வளத்துறையினர் பட்டியல் இட்டால் தான் பணிகளை வரும் நிதியாண்டில் செய்ய முடியும்.
பாண்டி, புதுசுக்காம்பட்டி: பெரியாறு பிரதான கால்வாய் 4வது பிரிவு வாய்க்காலில் சீமைக்கருவேல மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேவுகன், மீனாட்சிபுரம்: மீனாட்சிபுரம் பிட் 2 ல் உள்ள 40 வது மடையிலிருந்து வரும் தண்ணீரை உபரியாக 6 மடை வைத்து தனிநபர்கள் பயன்படுத்துவதால் 8, 9 வது மடைக்கு தண்ணீர் வரவில்லை.
மாறன், சூரப்பட்டி: பள்ளப்பட்டி கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் பெற்று 2021ல் தள்ளுபடி அறிவிப்பு செய்தும் தள்ளுபடி வழங்கவில்லை; புதிய கடன் வழங்க வேண்டும்.
அப்துல் சலாம், விளாச்சேரி: விளாச்சேரி கண்மாய் மீன்பிடி உரிமை தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவசி, செல்லம்பட்டி: செல்லம்பட்டி ஊர் தெற்குபுறம் ரோட்டோரமாக சாக்கடை கட்டுவதால் அனைத்து கழிவுநீரையும் கால்வாய்க்குள் கலக்க திட்டமிட்டுள்ளனர். அதை தடுக்க வேண்டும்.
மாயக்குமார், கோவிலாங்குளம்: எட்டு சங்கிலித்தொடர் கண்மாய்கள் உள்ளதால் கோவிலாங்குளம், கீழப்பச்சேரியில் தேனி, போடி ரோட்டில் உள்ள கால்வாய்களை துார்வார வேண்டும்.
இவ்வாறு கூறினர்.
மேலும் கோரிக்கை நேரத்தில் நுாறுநாள் வேலை திட்டத்தால் நெல்லில் களை எடுக்க முடியாமல் பாதிப்பு ஏற்பட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். திட்டத்தை தள்ளி வைக்க வேண்டுமென கூச்சலிட்டனர். மேலும் இந்தாண்டு பூச்சி, நோய் தாக்குதலால் ஏக்கருக்கு 10 மூடை கிடைப்பதே கஷ்டமாக இருப்பதால் எல்லோருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.
கலெக்டர் சங்கீதா பேசியதாவது: நிலையூரில் கார்த்திகை பாதை எங்குள்ளது என கண்டறிந்து அதை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். தாலுகா விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பி.டி.ஓ.,க்கள் கலந்து கொள்ளாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். 4வது பிரிவு வாய்க்காலில் நீர்வளத்துறை அனுமதியின்றி ஊராட்சி நிர்வாகம் எப்படி கருவேல மரங்களை வெட்ட முடியும். உதவி பொறியாளர் போலீசில் புகார் செய்யாததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்மாய்க்கு செல்லும் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு, மடை சீரமைப்பு போன்ற பிரச்னைகளை நீர்வளத்துறையைப் பட்டியலிட்டு வரும் நிதியாண்டில் எந்தெந்த வேலை செய்வதென ஒரு வாரத்தில் ஆய்வு செய்ய வேண்டும்.
பள்ளப்பட்டி கூட்டுறவு கடன் சங்கத்தில் நிதி கையாடல் பிரச்னையால் வழக்கு நிலுவையில் உள்ளது. விவசாயிகளுக்கு பாதிப்பில்லாதவாறு கடன் தள்ளுபடி வழங்க கூட்டுறவுத்துறை மூலம் அரசுக்கு பரிந்துரைக்கப்படும். கோவிலாங்குளம் பகுதியில் நுாறு நாள் வேலை திட்டத்தில் கால்வாய்களை சீரமைக்க ஏற்பாடு செய்யலாம்.
நுாறுநாள் வேலை திட்டம் குறித்து அரசுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளோம். இந்த கூட்டத்தில் அதை முடிவு செய்ய முடியாது. பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பிக்காமல் இழப்பீடு வழங்குவது கடினம். ஒவ்வொரு முறையும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் காப்பீடு செய்வது குறைவாக உள்ளது என்றார்.

